பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் வன்முறை கும்பல்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வன்முறை சம்பவங்களை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், அரசு அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வரிசையில், தற்போது மணல் கடத்தலை தடுக்க முயன்ற மாவட்ட தாசில்தாரை டிராக்டர் ஏற்றிக் கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்துள்ளது. இந்த சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கோரிக்கையும் எழுந்துள்ளது.
பா.ஜ.க ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் தாலுகாவில் சோனாலி மெட்கரி என்ற பெண் தாசில்தார் பணியாற்றி வருகிறார். நேற்றைய தினம் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சோனாலி அலுவலகப் பணி காரணமாக வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது உஜ்ஜைனி எனும் இடத்தில் வாகனம் செல்லும் போது டிராக்டர் மற்றும் லாரியில் மணலை ஏற்றிக்கொண்டு நான்கு பேர் வந்துள்ளனர்.
இதனைப் பார்த்த சோனாலி, மணல் ஏற்றி வந்த லாரியையும், டிராக்டரையும் மறித்து விசாரித்துள்ளார். விசாரணையின் போது ஓட்டுநரும், லாரியில் இருந்தவர்களும், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ”எங்களுக்கு வழிவிடவில்லை என்றால், உங்கள் வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு சென்றுவிடுவோம்” என மிரட்டியுள்ளனர்.
அந்த மிரட்டலுக்குப் பணியாத பெண் தாசில்தார், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலிஸாரை அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் டிராக்டரை அதிகாரிகளின் வாகனத்தில் மோதினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் கீழே விழுந்தனர். பெண் தாசில்தார் மட்டும் வாகனத்தில் மாட்டிக்கொள்ள இரண்டு முறை தாசில்தார் இருந்த வாகனத்தின் மீது டிராக்டரை விட்டு மோதிவிட்டு தப்பித்துச் சென்றனர். இதனையடுத்து அதிகாரிகள் பத்திரமாக தாசில்தாரை வாகனத்தில் இருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து இந்தாபூர் காவல் நிலையத்தில் தாசில்தார் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மணல் மாபியா கும்பல் மீது வழக்கு பதிவு செய்த போலிஸார் ஒருவனை கைது செய்துள்ளனர். மேலும் மூன்று பேரை தேடி வருவதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.