இந்தியா

பிரசவ உதவித் தொகை பெறுவதற்காக கோதுமை மாவில் குழந்தை செய்து எடுத்து வந்த பெண் - அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்

அரசின் திட்டங்களை பெறுவதற்காக ஆங்காங்கே பல்வேறு மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய பிரதேசத்திலும் விநோதமான மோசடியில் மூன்று பெண்கள் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவ உதவித் தொகை பெறுவதற்காக கோதுமை மாவில் குழந்தை செய்து எடுத்து வந்த பெண் - அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலத்தில் பிரசவம் ஆன பெண்களுக்கு 16 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில அரசால் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த நிதி நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பெரிதும் உதவியாக அமையும் என கருதியே அறிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை ஆயிரக்கணக்கானோர் இந்தத் திட்டத்தினால் பயன்பெற்றுள்ளனர்.

தற்போது இந்த நிதியைப் பெறுவதற்காக பலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாதக் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த நிதியைப் பெறுவதற்காக மொரேனா பகுதியில் கைலாராஸ் அரசு மருத்துவமனைக்கு கடந்த ஆக.,20ம் தேதி அன்று பிரசவத்திற்காக அரசு வழங்கும் நிதியுதவிக்கு விண்ணப்பிப்பதற்காக மூன்று பெண்கள் வந்தனர்.

மூவரில் ஒரு பெண், துணியால் சுற்றப்பட்ட குழந்தையுடன் வந்துள்ளார். விண்ணப்பிக்கும் போது குழந்தையை காண்பிக்குமாறு செவிலியர் கேட்டுள்ளார். அதற்கு குழந்தை இறந்தே பிறந்ததாகத் தெரிவித்து குழந்தையை காட்ட மறுத்துள்ளார்.

பிரசவ உதவித் தொகை பெறுவதற்காக கோதுமை மாவில் குழந்தை செய்து எடுத்து வந்த பெண் - அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்

இதனையடுத்து மருத்துவர்களை அழைத்த செவிலியர், அந்த பெண்ணிடம் குழந்தையை காண்பிக்கச் சொல்லி வெகு நேரம் கேட்டும் மறுத்து விடாபிடியாக இருந்ததால் அந்த பெண்ணின் கையில் இருந்து குழந்தையை வலுக்கட்டாயமாக வாங்கினர்.

அப்போது ஏற்பட்ட அமளியில் அந்தப் பெண்ணின் கையில் இருந்த துணியில் இருந்து மிகப்பெரிய மாவு உருண்டை கீழே விழுந்துள்ளது. இதனைக் கண்டு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, பிறந்த குழந்தை போன்று கோதுமை மாவை உருட்டி அதற்கு வண்ணம் பூசி யாருக்கும் தெரியாதபடி துணியால் சுற்றி மருத்துவமனை ஊழியர்களை ஏமாற்றி பணம் வாங்க வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலிஸார் மூன்று பெண்களிடமும் விசாரணை நடத்தினர். அதில் கையும் களவுமாக சிக்கிய மூன்று பெண்களும் கண்ணீர் விட்டு கதறி அழுததால் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories