மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவில் மோசமான நிதிநிலை நெருக்கடியில் நாடு சிக்கித் தவிப்பதாக, நிதி ஆயோக் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
பல முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் ஒருநாள் தயாரிப்பையே நிறுத்தி, பொருளாதார மந்தநிலை உள்ளது என மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் மக்கள் 5 ரூபாய் பிஸ்கட்டைக் கூட வாங்க யோசிப்பதாக பிரிட்டானியா நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பார்லே ஜி நிறுவனம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. ஜவுளித் துறை, இயந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் என அனைத்துத் துறைகளும் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
கடந்த மூன்று மாதங்களில் பல நிறுவனங்கள் மூடப்படுவதாக செய்திகள் வெளிவந்தன. இந்த செய்திகளை மூடி மறைக்கவே அரசியல் குழப்பங்களை பா.ஜ.க அரசு செய்து வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதனை உணர்ந்த சில தொழில் நிறுவனங்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளும், நெருக்கடிகளும் மக்களுக்குச் சென்று சேர்வதில்லை என்பதால், செய்திதாள்களில் விளம்பரம் கொடுத்து மத்திய அரசின் கவனத்தையும், மக்களின் கவனத்தையும் ஈர்க்க முயற்சித்துள்ளனர்.
காஷ்மீர் விவகாரம், கும்பல் வன்முறை மற்றும் தொடர் அரசியல் குழப்பங்கள் போன்றவையால் ஊடகங்கள் பொருளாதார சீர்கேடு குறித்துப் பேச மறுப்பதால் தங்கள் பிரச்னைகளை விளம்பரமாகக் கொடுத்து கவனத்தைப் பெற முயற்சி செய்துள்ளனர்.
சமீபத்தில், அசாமில் தேயிலைத் தொழில் நலிவடைந்துள்ள சூழலில் இந்திய தேயிலைக் கூட்டமைப்பு சார்பில் விளம்பரம் ஒன்று செய்திதாள்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவில் பெரும் லாபம் அடைந்துவந்த தேயிலை தொழில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. எனவே அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அசாமின் நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் இதனை ஒப்புக்கொண்டு, தேயிலையின் மீதான மாநில வரியை ரத்து செய்யவிருப்பதாக கூறியுள்ளார். அதனால் அரசுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
தற்போது, வட இந்திய ஜவுளி ஆலைகள் சங்கம் (Northern India Textile Mills Association - NITMA) சார்பில் ஆகஸ்ட் 20ம் தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸின் மூன்றாம் பக்கத்தில் அதேபோல் விளம்பரம் ஒன்றை அளித்துள்ளது. அந்த விளம்பரத்தில் ”இந்திய நூற்பாலைகள் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறது. மிகப்பெரும் வேலை இழப்புகளைச் சந்தித்து வருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில், “இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்கள், தற்போது பருத்தி நூல் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதாவது பருத்தி உற்பத்தி 332.25 லட்சம் பேல்களாக குறைந்துள்ளது. மேலும் 2019ம் ஆண்டில் (ஏப்ரல்-ஜூன்) பருத்தி நூல் மதிப்பு ஏற்றுமதியில் 34.6 சதவீதம் குறைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விளம்பரத்தின் கடைசிப் பத்தியில் “10 கோடி பேருக்கு மேல் வேலை செய்யும் இந்திய ஜவுளித் தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை இழப்புகளைச் சந்திக்கவிருக்கிறது. எனவே இதனை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் கவனத்தை இந்திய ஜவுளி ஆலைகள் சங்கம் நாடுகிறது” என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
இந்த விளம்பரம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் ஒருவர், “இந்தியாவில் விளம்பரம் மூலம் ஆட்சி செய்த ஒருவருக்கு தொழில் துறை நிறுவனங்கள் விளம்பரம் மூலம் தங்களின் பிரச்னைகளைத் தெரிவித்திருப்பது வெட்கக்கேடான விஷயம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நிலைமையை பா.ஜ.க அரசால் சரி செய்யமுடியாமல் போனதாலேயே நாட்டின் நிலைமையை பதற்றத்தில் வைத்துள்ளது” என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விளம்பரத்தைப் புகைப்படமாக எடுத்து பலரும் சமூக வலைதங்களில் பதிவிட்டு வருகின்றனர்.