ஆன்லைன் வர்த்தகத்தில் உலகளவில் முன்னணியில் உள்ள நிறுவனம் அமேசான். இதில், எழுதுகோல் முதல் அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபர்னிச்சர்கள் வரை சகலமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது உணவுத்துறையில் கால் பதித்துள்ள அமேசான், வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்களை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் வகையில் அமேசான் ஃப்ரஷ் என்ற சேவையையும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் முதற்கட்டமாக பெங்களூருவில் இந்த அமேசான் ஃப்ரஷ் சேவையை தொடங்கியுள்ளது அமேசான். இந்த சேவைக்கான வரவேற்பைப் பொறுத்து டெல்லி, ஐதராபாத், மும்பை, சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களுக்கு அமேசான் ஃப்ரஷ் சேவை விரிவுபடுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆன்லைனில் ஆர்டர் செய்த இரண்டே மணிநேரத்தில் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் என்கிறது அமேசான் ஃப்ரஷ். இது காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை செயல்படும் என்றும், ரூ.600க்கு மேல் ஆர்டர் செய்பவர்களுக்கு இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ரூ.49 முதல் பொருட்கள் கிடைக்கும் எனவும், குறைந்தபட்ச டெலிவரி கட்டணமாக ரூ.29 வசூலிக்கப்படும் எனவும் அமேசான் கூறியுள்ளது. இந்த அமேசான் ஃப்ரஷ் சேவையை அமேசான் ப்ரைம் செயலி மூலம் பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.