15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இயக்கத் தலைவர் குரு ரவிதாஸ். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப்பில் சில குறிப்புகளை எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள தலித் இயக்கங்கள் அவரை பின்பற்றி வருகின்றன. அதுமட்டுமின்றி ரவிதாசியா என்று அவரின் பெயரில் மதமே ஒன்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த குறிப்புகள் அனைத்தும் 16-ம் நூற்றாண்டில் இருந்தது என்றும் கூறுகின்றனர்.
அவரது நினைவாக டெல்லியின் துக்ளகாபாத்தில் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான குரு ரவிதாஸ் கோயில் மற்றும் சமாதி அங்கு உள்ளது. அதனை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் அக்கோவிலை இடிக்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு ரவிதாஸின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் மற்றும் தலித் அமைப்புகள் மத்தியில் அதிர்ச்சியும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தலித் அமைப்பினர் மற்றும் பலர் கோவில் பகுதியில் குவிந்தனர். இந்த போராட்டத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 90 பேரை போலிஸார் கைது செய்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் சாலைகளில் வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் மீது தடியடி நடத்தி போலிஸார் கூட்டத்தைக் கலைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ரவிதாஸ் கோவில் இடிக்கப்பட்டதை எதிர்த்து பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான தலித் மக்கள் நேற்று டெல்லியில் குவிந்தனர். இந்தப் போராட்டத்தை பீம் ஆர்பி தலைவர் சந்திர சேகர் ஆசாத் தலைமை தங்கினார். மற்றும் பல தலித் அமைப்பின் தலைவர்கள் சீக்கயர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் டெல்லி ஜாண்டேவாலம் பகுதி முதல் ராம்லீலா மைதானம் வரை கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெல்லி நகரமே ஸ்தம்பித்தது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத், “ரவிதாஸ் அவர்களின் கோவில் இருந்த இடத்தை ரவிதாஸ் சமூக மக்களிடம் ஒப்படைக்கவேண்டும். இதன் மூலம் ஆளும் அரசு குழப்பதை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது.” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.