ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இன்று (ஆகஸ்ட் 22) பிற்பகல் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில், ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி ஆகியோரும் நீதிமன்றத்திற்கு வந்தனர். ப.சிதம்பரம் சார்பில், கபில்சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோரும், சிபிஐ சார்பில் துஷார் மேத்தாவும் ஆஜராகினர்.
ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. “விசாரணையை துரிதப்படுத்த சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம்” என வாதிட்டார் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா.
தனது வாதத்தைத் தொடங்கிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஆகியோருக்கு ஏற்கெனவே ஜாமின் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
மேலும், “ஒரே ஒரு நாள் மட்டுமே ப.சிதம்பரத்திடம் விசாரணை செய்தனர். சி.பி.ஐ. அழைப்பை சிதம்பரம் ஒருபோதும் நிராகரித்ததில்லை. விசாரிக்கும் தேவை இருந்தால் மீண்டும் அழைத்திருக்கலாம்.” என வாதாடினார் கபில் சிபல்.
அபிஷேக் சிங்வி தனது வாதத்தில், “விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என சிபிஐ தரப்பு கூறுகிறது. ஒத்துழைப்பு தராதவர் சிபிஐ அழைத்தபோதெல்லாம் ஏன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “ப.சிதம்பரத்திற்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாதபோது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கூடாது. சிபிஐ-க்கு தேவை சிதம்பரத்தின் பதில் அல்ல அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய பதில்” எனக் காட்டமாக வாதம் செய்தார் அபிஷேக் சிங்வி.
அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு சற்றுநேரம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவின் தீர்ப்பு சற்றுமுன்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ப.சிதம்பரத்தை 5 நாட்கள் (வரும் ஆகஸ்ட் 26ம் தேதி வரை) சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மீண்டும், திங்கட்கிழமை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் தினமும் அரை மணி நேரம் குடும்பத்தினரை சந்திக்கலாம் எனவும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.