தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலாளியான ஆனந்த் என்பவர் ஹைடெக் ரயில் நிலையத்திலிருந்து எம்.எம்.டி.எஸ் ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் ரயிலிலேயே சரிந்துள்ளார்.
உடன் பயணித்த சையது மசார் எனும் பயணி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி, அங்கிருந்த மற்ற பயணிகள் உதவியுடன் முதலுதவிகள் செய்துள்ளார். தொடர்ந்து, மருத்துவ அவசர உதவி எண்ணுக்கு அழைத்து ஆம்புலன்ஸை அடுத்த ரயில் நிலையத்துக்கு வரச் செய்துள்ளார்.
ஆம்புலன்ஸ் உடனடியாக வந்தும், ஆனந்த்தின் உயிரைக் காப்பாற்ற முடியாத சோகம் ஏற்பட்டுள்ளது. பல வகைகளில் முயற்சித்தும் ஆம்புலன்ஸின் கதவைத் திறக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 10 நிமிட போராட்டத்திற்குப் பிறகு ஆம்புலன்ஸ் கதவு திறக்கப்பட்டு ஆனந்த் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டுள்ளார்.
ஆனால், மருத்துவப் பணியாளர்கள் முதலுதவி செய்ய முயற்சிக்கும்போதே, அவரது உயிர் பிரிந்துள்ளது. எவ்வளவோ முயற்சித்தும், ஆம்புலன்ஸ் கதவில் ஏற்பட்ட சிக்கலால் ஆனந்த் உயிரிழந்தது அங்கிருந்தோர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
நோயாளி ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட பிறகு மருத்துவ மானிட்டர் செயலிழந்துவிட்டதாகவும், மருத்துவ வசதிகள் முறையாகச் செய்யப்படுவதில்லை எனவும் அங்கிருந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.