உத்தர பிரதேச மாநிலம் ஃபரூகாபாத்தில் அமைந்துள்ளது ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனை. கடந்த ஞாயிறன்று அந்த மருத்துவமனைக்கு பிரசவ வலியில் துடித்த சஞ்சோ என்ற பெண்ணை உறவினர்கள் அழைத்து வந்துள்ளனர்.
மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லை எனக் கூறி அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள். இதையடுத்து, மிகுந்த வலியால் துடித்த அப்பெண்ணை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இயலாததால் நடைபாதையிலேயே பிரசவம் நடைபெற்றுள்ளது.
நடைபாதையிலேயே பிரசவம் நடைபெற்ற காட்சியை அங்கிருந்த ஒருவர் படம்பிடித்து உள்ளூர் நிருபர்களுக்கு பகிர்ந்ததையடுத்து, இத்தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவமனை நடைபாதையில் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி அப்பெண் குழந்தையைப் பிரசவிக்கும் காட்சி காண்போரை கலங்கச் செய்துள்ளது.
ஃபரூகாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரே அரசு சிறப்பு மருத்துவமனையான ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனையிலேயே இத்தகைய கொடுமை நிகழ்ந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த இக்கொடுமையை எதிர்த்து பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, விசாரித்து அலட்சியமாகச் செயல்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நீதிபதி மோனிகா ராணி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு 49 குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்தது இந்த மருத்துவமனையில் தான். இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இதே உத்தர பிரதேச மாநிலத்தின் ஜலான் மாவட்டத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் சாலையோரத்திலேயே குழந்தையைப் பெற்றெடுத்த செய்தி பரவலாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.