காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அம்மாநிலத்தை இரண்டாக பிரித்தும் மத்திய அரசு மசோதா நிறைவேற்றியது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னதாக, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தெரியவந்தால் மாநிலத்தில் கலவரம் உண்டாகும் என அறிந்து, பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக செய்தி பரப்பி, அம்மாநிலத்துக்கான தொலைதொடர்பு சேவைகளை முடக்கியும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பித்தது மத்திய அரசு. மசோதா நிறைவேற்றிய பிறகு, பாதுகாப்பு என்ற பெயரில் காவல் துறை மற்றும் ராணுவத்தின் ஒடுக்குமுறை அதிகரித்தது. மக்கள் தங்கள் அன்றாடும் தேவைகளை பூர்த்தி செய்யத்து கொள்ளவும், மருத்துவ உதவி பெறவும் கூட நடமாட முடியாமல் வீட்டுக்குள் ஒடுங்கினர். பக்ரித் தொழுகை முடிந்த கையுடன், கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்தன.
இப்படி ஒரு நெருக்கடியான சூழலில், ஸ்ரீநகரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான இன்ஷா அஷ்ரப்-க்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் இன்ஷா, அவரது தாய் மற்றும் அவரது சகோதரி ஆகிய மூன்று பேரும் வீட்டிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லால் டாட் மருத்துவமனைக்கு ஆட்டோவில் விரைந்தனர்.
அவர்கள் புறப்பட்ட சிறிது தூரத்திலேயே, ஆட்டோ பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. கர்ப்பிணியின் நிலை குறித்து, எடுத்துக்கூறியும் அவர்கள் ஆட்டோவை அனுமதிக்கவில்லை.
இதனால், வேறு வழியின்றி பனிக் குடம் உடைந்த நிலையில் கர்ப்பிணியான இன்ஷாவை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5 மணிக்கு இன்ஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால், அவர் மருத்துவமனைக்குச் சென்று சேரும்போது மணி 11. அங்கு இன்ஷாவுக்கு நல்லபடியாக பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அங்கிருந்து லால் டாட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவால் பிறந்த குழந்தைக்குத் தேவையான பொருட்களை வாங்கமுடியாமல் சிரமப்பட்டதாக இன்ஷாவின் தாய் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய இன்ஷாவின் தாய், ”ஸ்ரீநகர் முழுவதும் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவால் என் பேத்திக்குத் துணிகூட வாங்கமுடியவில்லை. குழந்தையை என் தாவணியால் சுற்றித்தான் தூக்கினேன். பின்னர் என் மற்றொரு மகள் அலைந்து திரிந்து குழந்தைக்கான துணியை வாங்கிவந்தாள்” என பரபரப்பும் இயலாமையும் குறையாமல் பேசுகிறார்.
குழந்தை பெற்ற இன்ஷா அஷ்ரப் பேசுகையில், ”என் நிலைமை குறித்து பாதுகாப்பு வீரர்களிடம் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர்கள் அதை கேட்காமல் எங்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். அதிகாலையில் எனக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால், நான் மருத்துவமனையை அடைவதற்கு பிற்பகல் ஆகிவிட்டது. காஷ்மீரில் தொலைதொடர்பு சேவைகளை முடங்கியுள்ளதால் குழந்தை பிறந்த விஷயம் அவரது தந்தைக்குத் தெரிவிக்கமுடியவில்லை.” என மனம் வெதும்பி கூறினார்.
பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவ உதவியை தடுத்து, அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாமல் ஒடுக்குமுறை ஏவப்பட்டிருக்கிறது. மக்களை இத்தனை இன்னல்களுக்கு உட்படுத்தித்தான் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதாக கூறுகிறது மத்திய அரசு.