உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் இளம்பெண் ஒருவர், தன்னை ஒரு ரவுடி கும்பல் தினமும் பாலியல் ரீதியில் துன்புறுத்துவதாகவும், இதனால் மிகுந்த அச்சமும், வேதனையும் ஏற்பட்டுள்ளதாகவும் கான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டு, நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி வந்துள்ளனர். அந்த பெண்ணும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், விரக்திக்குச் சென்ற அவர் நேற்றைய தினம் வீட்டில் குடும்பத்தினர் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அந்தப் பெண் உயிரிழந்ததற்கு காவல்துறை அதிகாரிகளே காரணம் எனவும், புகாரை பெற்று அதன்மீது நடவடிக்கை எடுக்காத கான்பூர் காவல்நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உறவினர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி ஏ.டி.ஜி.பி பிரகாஷ், “இந்த தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இந்த விஷயத்தில் சரியான நேரத்தில் கடமையைச் செய்யாத சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
இளம்பெண்ணின் தற்கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.