வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடக மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் (ஆக.,19&20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும், தெலங்கானாவிலும் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு. மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வளிமண்டல மேலடுக்கில் காற்றின் சுழற்சி நிலவுவதால் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருமழை தீவிரம் அடைந்து வருவதனால் தென் மற்றும் வட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் உள்ள கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணா நதியில் உள்ள அணைகளும் நிரம்பி வழிகின்றன.
இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என நதிக்கரையோரம் உள்ள இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழக அரசு. இந்த கரையோரம் தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லமும் அமைந்துள்ளது. அவரையும் சேர்த்தே வேறு இடங்களுக்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தப்பட்டது.
இந்த அறிவிப்பு வந்த சில மணி நேரத்தில், பிரகாசம் பேரேஜ் அணையில் வெளியேற்றப்பட்ட நீரினால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீடு உட்பட 38 பேரின் வீடு வெள்ளத்தில் முழ்கியுள்ளது. மேலும் அருகில் குடியிருந்தவர்களின் வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.
முன்னதாக கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை நீக்க, புதிதாக பதவியேற்ற ஜெகன் மோகன் அரசு முடிவெடுத்தது. அதில் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவும் அடங்கும். இப்போது அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது, நாயுடுவை வீட்டை விட்டு காலி செய்ய வைக்க அரசு செய்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசாங்க அதிகாரிகளின் தகவல் படி, கரையோரப் பகுதியில் கட்டிடங்கள் கட்டியது தவறு. இந்த கட்டிடங்களுக்கு அங்கீகாரம் இல்லை என்கின்றனர்.
முன்னதாக சந்திரபாபு நாயுடுவின் வீட்டின் மேலே ட்ரோன் கேமரா பறக்கவிடப்பட்டது அரசியல் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கு தேச கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
“வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காகவே ட்ரோன் கேமரா பயன்படுத்தப்பட்டது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சந்திரபாபு நாயுடுவின் வீடும் இருந்ததாலேயே அந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது.” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த பிரச்னை பெறும் சர்ச்சையாக மாறியுள்ளது. கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடு குடியிருந்து வரும் இல்லம் வாடகை வீடு என்பது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்குப் பருவமழை வடமாநிலங்களில் வழக்கமாக பெய்வதைக் காட்டிலும் இந்தாண்டு கூடுதலாக மழை பெய்து வருகிறது. அதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள தரைப் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் செல்லமுடியாமல் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் தற்போது வரை கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளினால் 28 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஹலாரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் பாதுகாப்பு கருதி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். பெண்களும், குழந்தைகளும் உயிரைப் பணயம் வைத்து கயிறுகட்டி அதைப் பிடித்தபடி ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஜோத்பூர், நாகௌர், பாலி ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நேற்றைய தினம் மட்டும் கனமழையால் 5 பேர் பலியாகிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்திலும் பல இடங்களில் கன மழையால் பெய்து வருகிறது. இந்திராசாகர் அணை மற்றும் பிரதான அணையின் 6 நீர் தேக்கங்களில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் மக்கள் தங்குவதற்கு இடம் எதுவும் இல்லாததால் அகதிகள் போல வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னையில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காற்றின் திசை மாறுதல் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது என்றும் வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்கள் என 22 மாவட்டங்களில் நாளை வரை மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இந்நிலையில் கனமழை, நிலச்சரிவு, வெள்ளத்தால் தற்போது வரை 88 உயிரிழந்துள்ளனர். 58 பேருக்கு மேல் காணவில்லை. மேலும் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் கேரளாவில் கனமழை கொட்டித்தீர்க்கப்போவதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதனால் 3 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மலப்புரம், மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கனமழை, நிலச்சரிவு, வெள்ளத்தால் பல்வேறு மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 8 முதல் கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் கபினி அணை மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்துவருகிறது.
நீர் மட்டம் அதிகரித்ததால் தமிழகத்துக்கு காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது . இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியது.
கேரளாவில் நிலச்சரிவு : வயநாடு புத்துமலை எஸ்டேட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழ்ந்த 10 உடல்கள் மீட்பு. இன்னும் பலர் மண்ணில் புதையுண்டுருக்கலாம் என அச்சம்.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது. 58 பேர் காணவில்லை என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 2 நாட்கள் பலத்த மழை நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் பணியில் உள்ளார்கள் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கனமழை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு கண்ணூர், காசர்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் 17 மாவட்டங்களில் 2028 கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி சுமார் 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 14 பேரை காணவில்லை. வெள்ளத்தால் 5.81 லட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சுமார் 80 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 73 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மலப்புரம், வயநாடு உட்பட 8 மாவட்டங்களில் அதிகளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கேரளா முழுவதும் 1,621 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் 74 ஆயிரத்து 400 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 55 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தஞ்சம் புகுந்துள்ளனர். கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.
கர்நாடகாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 3 லட்சம் கன அடியாக நீர் திறக்கப்பட்டது.
அதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று இரவு 1.50 லட்சம் கன அடியை எட்டும் என்றும் நாளை மாலைக்குள் 2.40 லட்சம் கன அடியை எட்டும் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் பார்வையிடுகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
கூடலூரின் நடுவட்டம் பகுதியில் மழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ள சாலைகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் திரண்டு வந்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை விவரித்தனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்த அவர், தி.மு.க சார்பில் நிதியுதவியும் வழங்கினார்.
தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அதீத கனமழையை கொடுத்து வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மழையின் தாக்கம் குறைந்துள்ளது. இன்று நீலகிரி,கோவை மற்றும் தேனி மாவட்ட மலை சார்ந்த பகுதிகளில் மட்டும் கனமழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் மோர்பி மாவட்டம் நீரில் முழ்கியது. அங்கு உள்ள மக்களை மீட்க்கும் பணியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர்.
அப்படி போலீஸ் கான்ஸ்டபிள் பிருத்விராஜ் ஜடேஜா, என்பவர் மோர்பி மாவட்டத்தின் கல்யாண்பார் கிராமத்தில் இருந்து இடுப்பளவு தண்ணீரில் 1.5 கி.மீ. தூரத்திற்கு மேல் இரண்டு குழந்தைகளை அவரது தோள்களில் சுமந்து சென்றுள்ளார். அவரின் இந்த செயலுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த எல்லமலை கிராமத்தில் பெய்து வரும் கன மழையில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்க முயன்ற சைனுதின் என்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழப்பு. சடலத்தை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது. நீலகிரியில் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு.
கேரள மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவையடுத்து சென்னையிலிருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ஏராளமான ரயில்களின் சேவையானது ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் பயணம் மேற்கொள்ள ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகள், தங்களது பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ள வசதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து 1.20 லட்சமும், கே.ஆர்.எஸ் அணையில் 1 லட்சம் கன அடியும் மொத்தமாக காவிரியில் வினாடிக்கு 2.20 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மலை காரணமாக மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரயில் போக்குவரத்து நாளை முதல் 13ம் தேதி வரை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் வயநாடு பகுதியில் பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கின. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டு வருகின்றனர். அப்படி வயநாட்டில் பிறந்து ஒருவாரமே ஆன குழந்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை முதல் மழை குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதேசமயம், வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையால் 13ம் தேதி முதல் மீண்டும் மழை அதிகரிக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் மழை கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டும் நிரம்பியுள்ளது. தண்ணீர் வரத்து அபாய அளவை எட்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையைத் திறக்க குஜராத் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இந்த அனையில் 131 மீட்டர் அளவுக்கு மட்டுமே தண்ணீர் சேமிக்க அனுமதி என்பதால், அணையில் உள்ள 30 மதகுகளில் 26 மதகுகளைத் திறந்துவிட்டுள்ளனார். அந்த மதகுகளில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து வருகிறது. மேலும் இந்த அணை முதன்முதலாக திறக்கப்படுவதாகவும் தகவல் வந்துள்ளது.
நீலகிரியில் பெய்யும் கனமழையால் பைக்காரா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதனால் 2 மணி நேரத்தில் பைக்காரா அணை திறக்கப்பட உள்ளது. அதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து கிளன்மார்கன், மாயார், மசினகுடி, தெற்குமரஹடா பகுதி மக்கள் ஆற்றங்கரையோரம் செல்லவேண்டாம் என நீலகிரி ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் தண்டவாளங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நிலச்சரிவு ஏற்பட்டு ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் 22 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கர்நாடகத்திலும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ல நிலம்பூர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 30 குடும்பத்தினர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரள மாநிலத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தாக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால் நீலிகிரி மக்கள் தவித்து வருகிறார்கள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேரள மாநிலத்தின் 8 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ரெட் அல்ர்ட் கொடுத்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். இன்றும் நாளையும் 200 மில்லி மீட்டர்களுக்கும் மேல் பதிவாகும் என்று எச்சரித்துள்ளது.
ஆகஸ்ட் 12-ம் தேதி வரை கன மழை நீடிக்கும் என்பதால், சேதம் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. கேரள அரசு வெள்ள மீட்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. ராணு உதவியும் நாடப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தமிழக பகுதிகளில் மிக கன மழை பெய்யும் என சென்ன வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
பாலக்காடு - ஒட்டபாலம் இடையே ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இரயில் சேவைகள் பாதிப்பு. கோவை வழியாக கேரளா சென்று வரும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை அடித்து நொறுக்கி வருகிறது. நேற்று ஒரே நாள் மட்டும் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 91 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஒரே நாள் கொட்டித் தீர்த்த மழையால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.