ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை திரும்பப்பெற்றதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக்கும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர் எதைப் பற்றி பேசுவார் என்பது குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், பொதுமக்களிடையே பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.
முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி தீடீரென நாட்டு மக்களிடம் தோன்றிய பிரதமர் மோடி, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் மக்கள் ஏ.டி.எம்.களை நோக்கி படையெடுத்தனர். மோடியின் பணமதிப்பிழப்பு திட்டத்தால் ஏழை எளிய மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடவுள்ளதாக அறிவிப்பு வெளியானதும் எல்லோர் மனதிலும் பணமதிப்பிழப்பு ஏற்படுத்திய கசப்பான நினைவுகள் அச்சத்தை ஏற்படுத்தின. மீண்டும் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்று ஏதேனும் அறிவிப்பாரா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால், சிலர் ஏ.டி.எம்.களை நோக்கி படையெடுத்துள்ளனர்.
தற்போது காஷ்மீர் விவகாரம் பெரிதாகப் பேசப்பட்டு வருவதால் காஷ்மீர் விவகாரம் குறித்து தான் மோடி பேசுவார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
முன்னதாக, இன்று மாலை 4 மணிக்கு மோடி பேசுவார் என அறிவிக்கப்பட்டு அந்த ட்வீட் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.