மாநிலங்களவையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். வாக்கெடுப்புடன் அது நிறைவேற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் உருவாக்கப்படுகின்றன. இதில் லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக அமையும் என்றும் அறிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காஷ்மீர் விவகாரத்தில் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ''ஜம்மு காஷ்மீரை ஒருதலைப்பட்சமாக பிரித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சிறையில் அடைத்து, நமது அரசியலமைப்பை மீறுவதன் மூலம் தேசிய ஒருமைப்பாடு மேம்படாது. இந்தியா என்பது மக்களால் உருவாக்கப்பட்டது, நிலங்களால் அல்ல. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது நாட்டின் பாதுகாப்பில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்'' என பதிவிட்டுள்ளார்.
மேலும், ”காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் ரகசிய இடங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விரோதமான செயல். இது முட்டாள்தனமானது” என்றார். இந்த முடிவால் காஷ்மீரில் இந்திய அரசு வருவாக்கியிருக்கும் அரசியல் தலைமைக்கான வெற்றிடத்தை, தீவிரவாதிகள் நிரப்ப முயற்சிப்பார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.