டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 21 வயது மாணவியை கால்டாக்ஸி ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அவரை ஐஐடி அருகே சாலையில் வீசிச் சென்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெல்லி பஞ்ச்கியான் பகுதியில் தோழியின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி, அங்கிருந்து பலகலைக்கழக விடுதிக்குத் திரும்புவதற்காக கால்டாக்ஸி புக் செய்துள்ளார்.
அவரை அழைத்துச் சென்ற கால் டாக்சி ஓட்டுநர், மாணவியை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக காரிலேயே வைத்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுவிட்டு, டெல்லி ஐஐடி வளாகம் அருகே அவரை வீசிவிட்டுச் சென்றுள்ளார்.
சுயநினைவின்றி மயங்கிக் கிடந்த மாணவியை அப்பகுதியில் சென்றவர்கள் மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்ற மாணவியின் அடையாள அட்டை மூலம், அவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி என அடையாளம் கண்டுள்ளனர்.
தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த மாணவியால் போலீசாரிடம் தெளிவாக விளக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. கால்டாக்ஸி ஓட்டுநரால் போதைப்பொருள் செலுத்தப்பட்டதால், என்ன நடந்தது; எத்தனை பேர் டாக்ஸிக்குள் இருந்தனர் என்கிற விவரங்கள் அவருக்கு எதுவும் நினைவிலில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியைக் கண்டறிவதற்காக விசாரணையைத் தீவிரப்படுத்த, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். மாணவிக்கு ஏற்பட்ட கொடுமை டெல்லி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.