உத்தரபிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் நடைபெறும் குற்றச் சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையும் முறையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என பொதுமக்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஜான்பூர் மாவட்டத்தில் கட்டிய மனைவியை பணயமாக வைத்து நண்பர்களுடன் கணவன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூதாட்டத்தில் தோற்றுப்போனதால் அந்த நண்பர்களுக்கு தனது மனைவியை இரையாக்கியுள்ளான்.
இதனையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக போலீஸிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை நாடியுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.
அவர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அவரது கணவரும், கணவரின் நண்பர்களான அருணும், அனிலும் குடித்துவிட்டு வீட்டில் சூதாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். மனைவியையே பணயமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார் கணவர்.
சூதாட்டத்தில் தோற்றுப்போனதால், அவரது நண்பர்கள் இருவரும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளனர்.
இதன் பிறகு பாதிக்கப்பட்ட அப்பெண் அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற கணவன், செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதை அடுத்து மீண்டும் அவனுடன் செல்ல சம்மதித்திருக்கிறார் அப்பெண்.
காரில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தனது நண்பர்களை மீண்டும் பாலியல் வல்லுறவு செய்ய கணவன் அனுமதித்திருக்கிறான். இது தொடர்பாக போலீசிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.