குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து, முத்தலாக் தடைச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன்படி, உடனடியாக மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்த உடனேயே, உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் நாட்டிலேயே முதல் வழக்கு பதிவானது. 1 லட்சம் ரூபாய் வரதட்சணை தராததால் தனது கணவர் உடனடியாக முத்தலாக் சொன்னதாக இஸ்லாமிய பெண் ஒருவர் மதுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் இக்ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஒரு பெண், தனது கணவர் வாட்ஸ்-அப்பில் முத்தலாக் கூறியதாக போலீசில் புகார் அளித்தார். வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் ஜனத் பேகம் குற்றம்சாட்டியுள்ளார். அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் அவரது கணவர் இம்தியாஸ் குலாம் படேல், அவரது தாய், மற்றும் சகோதரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், செல்போனிலேயே முத்தலாக் கூறியதாக ஹரியானாவைச் சேர்ந்த சலாவுதீன் என்ற இளைஞர் மீதும் முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ், தற்போது வரை மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறுபான்மையினரை ஒடுக்கும் விதமாக முத்தலாக் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் என எதிர்க்கட்சிகள் எச்சரித்து வந்த நிலையில், தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.