தபால் துறையில் அஞ்சலர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், இந்த தேர்வுக்கான வினாத்தாள்களில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டும் இடம்பெறும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் தேர்வெழுத முடியாமல் தேர்வர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அஞ்சல் துறை தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு சமூக வலைதளம் உட்பட பல்வேறு வகையில் எதிர்ப்புகள் எழுந்தனர். இதனையடுத்து, தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க எம்.எல்.ஏ எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையே, தமிழ் மொழி இல்லாததை கண்டித்து நாடாளுமன்றம் வரை குரல் எழுப்பப்பட்டதால் மக்களவையில் வாய்மொழி வாயிலாக தபால் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அரிவித்தது.
இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது, தபால்துறை தேர்வுகளில் தேர்வு மொழியாக எதிர்காலத்தில் தமிழ் மொழியும் இடம்பெறுமா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி பதிலளிக்க உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தபால்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 2 அறிக்கைகளை படித்துப்பார்த்த நீதிபதிகள், மாநில மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, தபால் தேர்வுகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்படும் எனக் குறிப்பிடப்படவில்லை என சுட்டிக்காட்டினர்.
இதைத் தொடர்ந்து, அனைத்து தபால்துறை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மீண்டும் தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய அமைச்சகம் ஆலோசித்து விரிவான பதிலை தாக்கல் செய்யும் எனவும் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி பதிலளித்தார்.
இதனையடுத்து, அஞ்சல் தேர்வு அறிவிப்பாணைகளை ரத்து செய்வதற்கான நிர்வாக காரணங்கள் என்ன எனக் கேட்டு விரிவான பதில் மனுவாக மத்திய அரசை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆக.,05ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.