தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சிறார் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி எம்.பி., ரவிக்குமார் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றை அளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் அதிகரித்துவரும் சிறார் பாலியல் வல்லுறவு குற்றங்கள் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் தானே முன்வந்து வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது. நீதிமன்றத்துக்கு உதவ ‘அமிகஸ் கூரி’யாக திரு வி. கிரி அவர்களை நீதிமன்றம் நியமித்துள்ளது.
போக்ஸோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்படவேண்டும்; அவை தனி கட்டடங்களில் இருக்கவேண்டும்; இந்த வழக்குகளுக்கு ஏதுவாக தடய ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும்; இரண்டே மாதங்களில் இந்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கவேண்டும் - உள்ளிட்ட நிபந்தனைகளை எந்த மாநில அரசும் நிறைவேற்றவில்லையென அமிகஸ் கூரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் இந்தியா முழுவதும் 24,212 சிறார் பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் 1,043 வழக்குகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளன. போக்ஸோ சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகளை எடுக்காததே தமிழ்நாட்டில் இவ்வளவு வழக்குகள் பதிவாகக் காரணம்.
எனவே, தமிழக அரசுக்கு உரிய அறிவுறுத்தலை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கவேண்டும்” என ரவிக்குமார் எம்.பி., அளித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.