பரேலி மாவட்டம் பித்தாரி செயின்பூரைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்ஷி மிஸ்ரா கடந்த வியாழக்கிழமை அஜிதேஷ் குமார் என்பவரை தனது விருப்பத்தின்படி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நேற்று ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
உத்தர பிரதேச எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ராவின் மகள் தலித் ஒருவரை மணந்து காவல்துறையினரிடம் பாதுகாப்பு கேட்டார். இந்நிலையில், தனது தந்தையிடமிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சாக்ஷி மிஸ்ரா, தனது தந்தை, சகோதரர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவர்கள் அடியாட்களை ஏவியிருப்பதாகவும், தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு வழங்குமாறு பரேலி மூத்த போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது தந்தை ராஜேஷ் மிஸ்ரா தன்னைக் கொல்ல முயற்சித்து வருவதாகவும், அவருக்கு உதவவேண்டாம் என்றும் பரேலியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் சாக்ஷி மிஸ்ரா.
மேலும் அந்த வீடியோவில் “எனது வாழ்க்கையை வாழ அனுமதியுங்கள்” என தனது தந்தையிடம் வேண்டுகோள் விடுத்துள்ள சாக்ஷி, “எனக்கு அல்லது கணவருக்கு ஏதேனும் நேர்ந்தால், உங்களைச் சிறைக்கு அனுப்புவதில் உறுதியாக இருப்பேன்” என்றும் எச்சரித்துள்ளார்.
சாக்ஷி மிஸ்ரா பாதுகாப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டது குறித்துப் பேசிய துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.கே.பாண்டே, சாக்ஷி தங்களது இருப்பிடத்தை தெரியப்படுத்தாத நிலையில் அவருக்கு எங்கு சென்று பாதுகாப்பு வழங்குவது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது விருப்பப்படி திருமணம் செய்துகொண்ட மகளுக்கு எதிராக, ஆணவப் படுகொலை செய்யத் துடிக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ-வுக்கு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.