நாடு முழுவதும் நிலத்தடி நீர் அளவு குறைந்து கடும் வறட்சி நிலவி வருகிறது. நாட்டின் பல பகுதியில் தண்ணீர் இன்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநில அரசுகள் நீர் ஆதாரங்களை உருவாக்கவில்லை என பல மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நிலத்தடி நீர் குறித்து நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கடந்த வியாழக்கிழமை மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ரத்தன் லால் காத்தரியா பதில் அளித்தார். அப்போது அவர் கூறிய பதில்கள் உறுப்பினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணை அமைச்சர் கத்தாரியா நாடாளுமன்றத்தில் கூறியதாவது, "நாட்டின் பல பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதள பாதாளத்திற்குச் சென்றுள்ளது. நிலத்தடி நீரை அதிகம் எடுப்பதாலும், பருவநிலை மாற்றங்கள், சுத்தமான குடிநீர் தேவை, தொழிற்சாலை எண்ணிக்கை, மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாதல் போன்ற மிக முக்கியமான காரணங்களினால் நிலத்தடி நீரின் அளவு குறைந்துவிட்டது என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், நாட்டில் 52 சதவீத கிணறுகள் கண்காணிக்கப்பட்டன. கிணறுகளின் நீர்மட்டம் குறிப்பிட்ட காலத்தில் வெகுவாக குறைந்து விட்டது. கிட்டத்தக்க 16 தாலுகா மண்டலம், வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்பட்டுள்ளது. இதில் 4 சதவீத பகுதி மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
இதனையடுத்து நாடு முழுவதும், நிலத்தடி நீர் அளவு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வு, 17 மாநிலங்களில் உள்ள 6 ஆயிரத்து 584 தாலுகா, மண்டலம் உள்ளிட்ட பகுதியில் நடத்தப்பட்டது. அதில் 4 ஆயிரத்து 520 பகுதிகள் பாதுகாப்பான பிரிவின் கீழ் உள்ளது. 1,034 பகுதிகள் அளவுக்கதிகமாக நிலத்தடி நீர் சுரண்டல் பிரிவின் கீழ் உள்ளது.
நாட்டில் ஏறக்குறைய 681 பகுதியில், அதாவது 10 சதவீதம் பகுதிகள் மிதமான மோசம் என்ற பிரிவிலும், 253 பகுதிகள் மோசமான பிரிவிலும், 1 சதவீத பகுதி உப்பு நீர் பிரிவிலும் உள்ளது. இந்த தகவல் 2013ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வுகளை 2018ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வுகளை ஒப்பிட்டு இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளனர்.
நிலத்தடி நீரை அதிமாக எடுத்த முதல் மாநில பஞ்சாப் ஆகும், 76 சதவீத அளவிற்கு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துள்ளனர். அதையடுத்து ராஜஸ்தான் 66 சதவீத அளவிற்கு நிலத்தடி நீரை உறிஞ்சியுள்ளது. டெல்லி 56 சதவீதமும், ஹரியானா மாநிலத்தவர் 54 சதவீதம் அளவிற்கு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துள்ளனர். தமிழகத்தில் 358 பகுதிகளில் நிலத்தடி நீர் அளவுக்கதிகமாக உறிஞ்சப்பட்டுள்ளது.
மேற்குவங்கம், உத்தரகாண்ட், திரிபுரா, ஒடிசா, நாகாலாந்து, மேகாலயா, மிசோரம், மணிப்பூர், காஷ்மீர், அசாம், அருணாச்சல் ஆகிய மாநிலங்களில் அளவுக்கதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படவில்லை என்றும் அருணாச்சல், அசாம், கோவா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அந்தமான் நிகோபர், சண்டிகர், தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாப்பான நிலையில் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் இணை அமைச்சர் கத்தாரியா தெரிவித்துள்ளார்.