இந்தியா

ஒரே நாடு... ஒரே தேர்தல்... சர்வாதிகாரத்தை நிலைநாட்ட நினைக்கிறதா பா.ஜ.க?!

வெளிநாடுகளில் அதிபர் பதவி பிரதமரை விட செல்வாக்கு மிகுந்ததாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களின் படிப்பினையாக இந்தியாவிலும் செல்வாக்கு மிகுந்த அதிபர் பதவியை அடைய வேண்டும் என்று நினைக்கிறாரா மோடி ?

Modi one nation one election
Modi one nation one election
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒரு நாட்டின் பிரதமர் சீர்திருத்தங்களை செய்வேன் என்று கூறி மக்களிடம் ஆதரவை ஏமாற்றி பெறுகிறார். பிறகு க்ரீன் புக் என்ற அதிகாரத்துக்கான கொள்கையை நடைமுறைப்படுத்துகிறார். அது கிட்டத்தட்ட ஒரே தேர்தல் முறையை ஒத்த ஒரு செயல். அது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக மாறி, சர்வாதிகாரியாக உருவெடுக்கிறார் லிபியாவில் பிரதமராக சர்வாதிகார ஆட்சி நடத்திய கடாஃபி.

தேர்தல் முறைகளுக்கு இன்னொரு உதாரணமும் நம் கண் முன்னே உள்ளது. வடகொரிய தலைவர் கிம். வடகொரியாவிலும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.அதில் கிம் மட்டுமே வெற்றி பெறுவார் என்ற முடிவோடு தேர்தல் நடத்தப்படுகிறது. கிம் சொல்வதுதான் அங்குள்ள தேர்தல் அதிகாரிகளின் சட்டமாக உள்ளது. இந்த இரண்டு நாடுகளும் சர்வாதிகாரத்தைத் தான் மக்களிடத்தில் திணித்துள்ளன. இந்த உதாரணங்களோடு ஒத்துப்போகும் ஒரே நாடு.. ஒரே தேர்தல் என்று முழங்க துவங்கியிருக்கிறார் நரேந்திர மோடி.

one nation one eletion
one nation one eletion

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்த நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் இந்தியாவுக்கு பல ஆபத்துக்கள் எழும் அபாயம் உள்ளது.

130 கோடி மக்கள் உள்ள தேசத்தில் அனைத்து மாநிலங்களிலும், அனைத்து வாக்குச்சாவடியிலும் துணை ராணுவப்படையினரை நியமிக்கும் அளவுக்கு போதிய பாதுகாப்பு வீரர்கள் நம்மிடம் உள்ளனரா?

மாநில அரசு மீதோ , மத்திய அரசு மீதோ நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வந்தால் அதன் நிலை என்னவாகும்.

ஏற்கெனவே மாநில உரிமைகளை பறிக்கும் நிலைதான் நீடிக்கிறது. இதில் சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒருசேர நடத்துவது மாநில அரசுகளை பலவீனப்படுத்தும் விதமாக அமையாதா?

கட்சித்தாவல் சட்டம் நீர்த்துப் போய் குதிரை பேரங்கள் வலுக்கும் அபாயம் நீடிக்கும் என்பது போன்ற அதிர்ச்சிகளுக்கும் வாய்ப்பிருக்கிறது.

ஒருவேளை ஒரு மாநில சட்டமன்றம் கலைந்தால் அனைத்து சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடக்குமா? இடைத்தேர்தலாக நடக்கும் என்றால் மீண்டும் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய ஆகும் செலவு தற்போதுள்ள நடைமுறையைவிட அதிகமாகத்தானே அமையும்.

மாநில அரசைக் கவிழ்த்து ஆளுநர் ஆட்சியையும், மத்திய அரசை கவிழ்த்து குடியரசு தலைவர் ஆட்சியையும் அமைத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நபர்களால் ஆட்சி நடத்துவது எந்த விதத்தில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

one nation one eletion
one nation one eletion

“ஒரே நாடு... ஒரே தேர்தல்” முழக்கம் தேசியக் கட்சிகளே மாநிலங்களில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடா... மாநிலக்கட்சிகள் மாநில உரிமைகளை கையிலெடுத்து போராடும் விஷயங்களில் பணிந்து போக வேண்டிய சூழல் உள்ளதால் மாநிலக் கட்சிகளை அழித்து ஒற்றை ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தும் எண்ணமா என்ற கேள்விகள் தானாகவே எழுகிறது.

இந்த நடவடிக்கையெல்லாம் ஒற்றை அதிகாரமான அதிபராட்சிக்கு வழிவகுக்கும் என்ற விஷயமே அனைவரது விமர்சனமாகவும் எழுந்துள்ள நிலையில் இந்தியாவில் அதிபராட்சியை விரும்புகிறதா பா.ஜ.க அரசு என்ற கேள்வியும் தானாகவே எழுகிறது.

வெளிநாடுகளில் எல்லாம் அதிபர் பதவி பிரதமரை விட செல்வாக்கு மிகுந்ததாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களின் படிப்பினையாக இந்தியாவிலும் செல்வாக்கு மிகுந்த அதிபர் பதவியை அடையவேண்டும் என்று நினைக்கிறாரா மோடி என்ற விவாதங்கள் தற்போது எழத்துவங்கிவிட்டன.

ஒரே மதம், ஒரே உணவு, ஒரே வரி, ஒரே மொழி என்ற திணிப்புகளின் நீட்சியாக ஒரே தேர்தலை முன்னிறுத்துகிறது பா.ஜ.க. இந்தியாவே பா.ஜ.க-வுக்கு வாக்களித்தபோது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் பா.ஜ.க-வை முழுமையாகப் புறக்கணித்தன. இப்படி மற்ற விஷயங்களில் அல்ல. தேர்தலிலேயே மாற்றுக்கருத்து கொண்ட மாநிலங்களில் இந்த கொள்கை எதிர்க்கப்படுகிறது. இதனை பெரும்பான்மை உறுப்பினர்களை வைத்து சாதித்தால் பன்முக கலாச்சாரங்கள் கொண்ட நாட்டில் எழுச்சி உருவாகும் என்பது கூடவா பா.ஜ.க-வுக்கு தெரியாது?

modi amith shah
modi amith shah

மாநிலக் கட்சிகள் ஒரே நாடு - ஒரே தேர்தலை விரும்பவில்லை. ஆனால், பா.ஜ.க இதனை வேகமாக நடைமுறைப்படுத்த நினைக்கிறது. பா.ஜ.க வென்றால் தேர்தலே இருக்காது என்று தேர்தலுக்கு முன் எழுந்த குரல்களோடு ஒப்பிட்டு பார்த்தால் இந்த ஒரே நாடு... ஒரே தேர்தல் அந்த முழங்கங்களின் துவக்கப் புள்ளியாக அமைகிறது. சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடிக்கும் “ஒரே நாடு - ஒரே தேர்தல்” முழக்கம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுக்கு தேவைதானா என்றால் இல்லை என்பதே பெரும்பான்மை மக்களின் பதிலாக உள்ளது.

banner

Related Stories

Related Stories