உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே ஒரு பெண், தான் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாகவும், அதுகுறித்து அவரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்த சம்பவத்தை டெல்லியை சேர்ந்த செய்தியாளர் பிரஷாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக எடுத்து வெளியிட்டார்.
இதையடுத்து செய்தியாளர் பிரஷாந்த்துக்கு எதிராக லக்னோ ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் டெல்லி மேற்கு வினோத் நகரில் உள்ள செய்தியாளர் பிரஷாந்த் வீட்டில் இருந்து கைது செய்து லக்னோவுக்கு அழைத்துச் சென்ற உத்தரபிரதேச போலீசார்.
அந்தப் பெண்ணின் வீடியோவை தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதனையடுத்து அதனை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் ஈஷிகா சிங், மற்றும் செய்தி ஆசிரியர் அணுஜ் சுக்லாவையும் உத்திரபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக கோராக்பூரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதித்யநாத்தை விமரிசித்த பெண்ணையும் சனிக்கிழமை லக்னோ காவல்துறை கைது செய்தது
இதுகுறித்து கோராக்பூர் போலீசார் ட்விட்டர் பதிவில் கூறியதாவது," யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து பரப்புவதாக, கடந்த 3 நாட்களில் மட்டும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளரின் மனைவி உச்சநீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனு தாக்கல் செய்தார். இன்று வழக்கு நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பாக வழக்கறிஞர் முறையிட்டார். அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விரிவாக விசாரிப்பதாகக் கூறி ஒத்திவைத்தனர்.