நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் ரூ.60 ஆயிரம் கோடி செலவழித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், உலகளவில் அதிகம் செலவான தேர்தல்களில் இது முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 11-ம் தேதி துவங்கி, மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. ஒரு மக்களவை வேட்பாளர் தேர்தலுக்கு ரூ. 70 லட்சம் வரை மட்டுமே செலவு செய்யவேண்டும் என தேர்தல் ஆணைய விதி உள்ளது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் செலவான தொகை குறித்து டெல்லியை சேர்ந்த சிஎம்எஸ் (Center for Media Studies) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் 60,000 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் செலவழிக்கப்பட்ட தொகை ரூ. 30,000 கோடி. கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் இருமடங்கு அதிகமாகச் செலவழிக்கப்பட்டுள்ளது.
இதே போல் செலவு செய்தால், 2024-ம் ஆண்டில் நடக்கும் மக்களவைத் தேர்தல் செலவு ஒரு டிரில்லியனை தாண்டும் என சிஎம்எஸ் நிறுவனத்தின் தலைவர் பாஸ்கர ராவ் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் செலவு அதிகரிப்பது தான் ஊழலுக்கு அடிப்படையாக உள்ளது; இதைக் கவனிக்க தவறினால், இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
மொத்தம் செலவழிக்கப்பட்ட தொகையில் பா.ஜ.க 45% செலவழித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.