ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர் பதற்றத்தின் காரணமாக அங்குள்ள மக்களின் மனநிலை குறித்து சமீபத்தில் ஜெனீவாவைச் சேர்ந்த ஓர் ஆய்வு நிறுவனம் மக்களிடையே ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல் என்னவெனில் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த மன உளைச்சல் மற்றும் உளவியல் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதுதான்.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, " காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் 18 லட்சம் மக்களில் 45 சதவீத மக்கள் மனவேதனையுடன் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகிறது. 41% பேர் மிகையான மன அழுத்தத்தில் உள்ளனர். 26% பேர் கவலையுடனும் 19% மக்கள் மனச்சோர்வால்பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
37% ஆண்களும் 50% பெண்களும் மனவேதனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21% ஆண்கள் மற்றும் 36% பெண்களும் சந்தேகத்திற்கு இடமின்றி மிகச் சோகமான மனநிலையில் இருக்கின்றனர். தற்கொலை முயற்சிகள் 1994-க்கும் 2012-க்கும் இடையே 250% அதிகரித்திருக்கிறது.
பேலட் குண்டுகளினால் பாதிக்கப்பட்ட 380 நபர்களிடம் ஜி.எம்.சி அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், அவர்களில் மனத் தளர்ச்சி சீர்குலைவு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் 25.79% எனத் தெரியவந்துள்ளது. 15.79% பேர் சரிசெய்தல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மிகுதியான அச்சத்தால் 12.11% பேரும், குறிப்பிட்ட தாழ்வு மனப்பான்மையால் 2.89 சதவீதம் பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் மற்றொரு ஆய்வில் பேலட் குண்டுகளினால் 91.92% பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 70 சதவீதமானவர்கள் மற்ற உடல் உறுப்புகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு 2016 ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2018 ஆகஸ்ட் வரை தயாரிக்கப்பட்டது. இந்த ஆய்வை 333 ஆண்களும் 47 பெண்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு சமூக பொருளாதார சூழலைச் சேர்ந்த மக்களிடம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவின் மூலம் ஒரு மாநிலத்தின் பெருவாரியான இளைஞர்கள் மனரீதியாக இவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டு சுதந்திரமான வாழ்க்கையை வாழமுடியாத சூழல் உருவாகியிருப்பது பெரும் வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது. காஷ்மீர் பகுதியில் உருவாகும் அசாதாரண சூழலைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் உள்ளது என சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.