கேரளாவில் எதிர்வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு அங்கு தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது.
அண்மையில் கேரளா சென்றிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்க கடத்தல் வழக்கில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி சில கேள்விகளையும் முன்வைத்தார்.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் கண்ணூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது அமித்ஷா மீது சரமாரியான கேள்விகளை அடுக்கினார் பினராயி விஜயன்.
அதில், “கேரளாவை ஊழலின் பூமி எனக் கூறி அமித்ஷா அவமதித்திருக்கிறார். தங்கள் கடத்தல் வழக்கில் சங் பரிவாரைச் சேர்ந்த முக்கிய நபரும் சிக்கியிருக்கிறார் என உங்களுக்கு தெரியாதா?
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்க கடத்தலை தடுப்பதில் சுங்கத் துறைக்குதான் முக்கிய பங்கு இருக்கிறது என தெரியாதா?
பாஜக ஆட்சிக்கு பின் திருவனந்தபுரம் விமானநிலையம் கடத்தலின் கூடாரம் ஆனது எப்படி?
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சங் பரிவாரைச் சேர்ந்தோரே உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்களே?
தங்க கடத்தல் வழக்கில் உங்கள் ஆதரவாளர்கள் மீதே புகார் திரும்பிய போது விசாரணையை திசைதிருப்பியது ஏன்? விசாரணை அதிகாரிகளை இரவோடு இரவாக மாற்றியது ஏன்?
கடத்தல் முதல்வர் பெயரை குறிப்பிட அழுத்த கொடுத்ததாக வெளியான ஆடியோ குறித்து நீங்கள் அறிவீர்களா?
என கேள்விக்கணைகளை தொடுத்த பினராயி விஜயன், அமித்ஷாவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் ஒருநாளும் சிறை தண்டனை இருந்ததில்லை. ஆனால் போலி என்கவுண்டர் மற்றும் குஜராத் கலவரத்தில் அமித்ஷாவின் பங்கு என்னவெல்லாம் இருந்தது அவர் கைதாகி சிறைவாசம் சென்றதெல்லாம் நாடறியும்.
உங்களின் பிரிவினைவாத கொள்கைகள் எதுவும் பலிக்காது. ஏனெனில் இது கேரளம் என பினராயி விஜயன் கடுமையாக சாடியுள்ளார்.