சட்டமன்றத் தேர்தலுக்காக அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இடையே கருத்து மோதல் வெடித்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பிஎஸ், ஜெயக்குமார் ஆகியோரை முக்கிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களாக அறிவித்து முதற்கட்டமாக 6 வேட்பாளர்களின் பட்டியலை கடந்த வாரம் அதிமுக வெளியிட்டிருந்தது. அதன்பிறகு மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்த ஆலோசனைகள் 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இப்படி இருக்கையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சி நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காமல் புறக்கணித்திருக்கிறார். இதற்கு பின்னணியில் தங்கள் ஆதரவாளர்களை வேட்பாளராக இறக்குவதில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே ஓ பன்னீர்செல்வம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மேலும் கட்சி கூட்டத்தை புறக்கணித்ததோடு வேட்பாளர் தேர்வு குறித்து மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி தனியாக ஆலோசனை நடத்தியதும் அதிமுகவினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், முதற்கட்ட வேட்பாளர் அறிவிப்பை போல் அடுத்தகட்ட வேட்பாளர் அறிவிப்பும் சரிசமமாக தத்தம் ஆதரவாளர்களை அறிவிக்க வேண்டும் என்ற பன்னீர்செல்வத்தின் யோசனையை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்திருக்கிறார். இருப்பினும் ஓ.பி.எஸ் தனது முடிவில் இருந்து இறங்க மறுப்பதால் 2வது கட்டவேட்பாளர் பட்டியலில் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, உதயக்குமார் போன்றோரின் பெயர்கள் இடம்பெறாதா என கலக்கமடைந்திருக்கிறார்கள்.
இதுபோக, அடுத்தகட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதிலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வத்தின் கை ஓங்கியிருப்பதால் எடப்பாடியின் ஆதரவாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
தென் மாவட்டங்களில் உள்ள அதிமுகவின் முன்னோடிகளை விட ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே எதிர்வரும் வேட்பாளர் பட்டியலில் யார் யாருடையை பெயர்களெல்லாம் இடம்பெறும் என்ற கிலியை அதிமுகவினரை சூழ்ந்துள்ளது.