திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு தருவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட வேட்டி சேலை மற்றும் சில்வர் தட்டுகளை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
தாராபுரத்தை அடுத்துள்ள குளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. நகர செயலாளர் காமராஜனின், உறவினருக்கு சொந்தமான தனியார் கல்லூரி ஒன்றில் வாக்காளர்களுக்கு, வழங்குவதற்காக பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தி.மு.க.வினருக்கு தகவல் வந்தது.
அதன் அடிப்படையில், அ.தி.மு.க. நகர செயலாளர் காமராஜின் உறவினருக்கு சொந்தமான கல்லூரியை முற்றுகையிட்டு, வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கக்கூடிய பொருட்களை உடனடியாக பறிமுதல் செய்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக் கோரி திமுகவினர் சாலை மறியல் போராட்டம் செய்வோம் என அறிவித்ததை தொடர்ந்து வேறு வழியின்றி தேர்தல் பறக்கும் படையினர் அ.தி.மு.க. பிரமுகர்களின் எதிர்ப்பை மீறி, தனியார் கல்லூரியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் கல்லூரி முன் திரண்ட திமுகவினர் இலவச பொருட்களை பறிமுதல் செய்து பதுக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பைபாஸ் சாலையில், கல்லூரி முன், சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கிருந்து சிறிது தூரத்தில் அதிமுகவினரும் கூட்டமாக திரண்டதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் டிஎஸ்பி ஜெயராம், தாசில்தார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்து, பறக்கும் படையினரை அழைத்துக்கொண்டு கல்லூரிக்குள் சென்று சோதனையிட்டனர்.
சோதனை செய்த போது பொதுமக்களுக்கு வழங்க அதிமுக நிர்வாகிகள் வைத்திருந்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சில்வர் தட்டுகள், 4800 வேஷ்டிகள், சுமார் 3000 புடவைகள் என, பொது மக்களிடம் வாங்கிய குடும்ப அட்டையின் நகலில் உள்ள உறுப்பினர்கள் வீதம், ஒரு தட்டில் புடவை மற்றும் வேஷ்டி உள்ளிட்ட பொருட்களை வைத்து கொடுக்க பதுக்கி வைத்திருந்த பொருட்களை, திமுக நிர்வாகிகளின் போராட்டத்திற்கு பின்பு, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.