நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஜூன் 1) நிறைவடைந்து விட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. அந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு ஆதரவாகவே வெளியாகியுள்ளது. குறிப்பாக பாஜக கூட்டணி 350 முதல் 371 இடங்களுக்கும் மேல் வெற்றி பெரும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியானது..
மேலும் நாடு முழுவதும் பாஜகவே பெரும்பான்மை பெரும் என்றும், பாஜக ஆளாத முக்கிய மாநிலங்களில் கூட பாஜக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் NewsX, NDTV, India News ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 371, இந்தியா கூட்டணி 125, பிற 47 என்று ஒரே மாதிரியான முடிவுகள் வெளியானது. இதனால் பாஜகவை கொடுத்ததை இந்த நிறுவனங்கள் அப்படியே வெளியிட்டுள்ளது என விமர்சிக்கப்பட்டது.
தொடர்ந்து சொல்லி வைத்தது போல் பாஜக 370 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் அனைவர் மத்தியிலும் பெரும் சந்தேகத்தை எழுப்பிய நிலையில், தற்போது போட்டியிட்ட தொகுதிகளை விட அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெரும் என்று கருத்துக்கணிப்பில் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து இன்று ராகுல் காந்தி அளித்த பேட்டியில், ”மக்களவை தேர்தலில் 295 இடங்களை கைப்பற்றி இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும். நேற்று வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் Exit Poll அல்ல, மோடியின் மீடியா Poll” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், "நேற்று வெளியான EXIT POLL முடிவு குறித்து மோடி குதித்து நடனமாடுவார். ஆனால் உண்மையான முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகும். பாஜக உண்மையில் நேசமிகு கட்சிதான். அதனால்தான் 442 இடங்களில் 110 இடங்களை அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுக்கே வழங்கியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டில் AAJ TAK AXIS MY INDIA, மேற்கு வங்கத்தில் பாஜக 160 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டது. அப்போது பாஜக தலைவர்களும் இனிப்புகளை கொடுத்து மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் தேர்தல் முடிவில் பாஜகவுக்கு வெறும் 77 இடங்கள் மட்டுமே கிடைத்தது
இப்போது மோடிக்கு Godi மீடியா கொடுக்கும் 400 சீட்களில், 200க்கும் குறைவாகத்தான் பாஜகவுக்கு கிடைக்கும். வாக்கு எண்ணிக்கையின்போது உண்மையான முடிவுகள் வெளியாகும்." என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவ சேனா (உத்தவ்) சஞ்சய் ராவத், "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்று சொல்லி நம்பர்கள் வெளியிடப்பட்டிருப்பது Corporate விளையாட்டு. நீங்கள் பணம் கொடுத்தால் உங்களுக்கு தேவையான நம்பர்களை வெளியிடுவார்கள். யார் அதிக பணம் தருகிறார்களோ, அவர்களுக்கு சாதகமாக கணிப்புகள் வெளியிடுவது தான் அந்த மீடியாக்களின் வேலை. இந்தியா கூட்டணி 295-லிருந்து 310 இடங்கள் வரை பெற்று நிச்சயம் ஆட்சியமைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.