நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், 5 கட்டங்கள் நிறைவடைந்துள்ள. இந்த சூழலில் மீதமிருக்கும் தொகுதிகளுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 6-ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதியான ஒடிசாவின் பூரி தொகுதியில் பிரதமர் மோடி நேற்று ரோட் ஷோ மேற்கொண்டார்.
இதில் பூரி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ராவும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் பேட்டியளிக்கும்போது, “பிரதமர் மோடியை காண இங்கு லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளோம். கடவுள் ஜெகநாதனே மோடியின் பக்தர். அவரது வருகைக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். என்னால் எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இது ஒடிசா மக்களுக்கு ஒரு அற்புதமான நாளாக இருக்கும்.” என்றார்.
அந்த கடவுளே மோடியின் பக்தர் என்று கூறிய பாஜக வேட்பாளருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த சூழலில் பாஜக கடவுளை அவமதிப்பது இது முதல் முறையல்ல என்று காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஸ்ரீநேட் பட்டியலிட்டு விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி பின்வருமாறு :
"பாஜக கடவுளை அவமதிப்பது இது முதல் முறையல்ல!
* இராமர் கோயில் திறப்பு விழாவின்போது, இராமர் குழந்தை வடிவிலும், அவரது கையை பிடித்து மோடி அழைத்துச் செல்வது போன்ற புகைப்படம் பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியானது.
* இராமர் கோயில் திறப்பு விழாவின்போது, அயோத்தியில் இராமர் கட்-அவுட்களை விட நரேந்திர மோடியின் கட்-அவுட்கள் பெரியளவிலும், அதிக அளவிலும் நிறுவப்பட்டது.
* விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் சம்பத் ராய், மோடியை விஷ்ணுவின் அவதாரம் என்று கூறினார்
* மோடியை கடவுளின் அவதாரம் என்று ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
* நடிகையும், பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத், பாஜக தலைவர் சாக்ஷி மகராஜ் உள்ளிட்டோர் மோடியை ஸ்ரீ இராமரின் அவதாரம் என்று வர்ணித்தார்.
* உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் தீரத் சிங் ராவத், மோடியை கடவுளுடன் ஒப்பிட்டிருந்தார்.
- இப்படிப்பட்டவர்களால், தற்போது நாசீசிஸ்ட்டாக மாறி, மோடி தன்னையே கடவுளின் தூதர் என்று நினைக்க தொடங்கிவிட்டார்." என்று பேசினார்.