18 ஆவது மக்களவை தொகுதி 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த மக்களை தேர்தலில் 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்தும் ஒரே கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தலில் களம் கண்டுள்ளனர்.
இந்த இந்தியா கூட்டணி உருவானதில் இருந்தே பா.ஜ.கவின் தோல்வி தொடங்கிவிட்டது. தற்போது நடந்து முடிந்துள்ள மூன்று கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகளும் பா.ஜ.கவின் தோல்வியை உறுதிபடுத்தி வருவதாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் பா.ஜ.க.வின் தோல்வி தவிர்க்க முடியாதது என காரணத்தை பட்டியலிட்டு உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதியுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அகிலேஷ் யாதவ் வெள்யிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், ”பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் அதிகரிப்பால், மக்களின் ஆதரவை பா.ஜ.க இழந்துவிட்டது. சமூக நீதிக்கு எதிராக தொடர்ந்து பேசுவதால், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சொந்த கட்சி தொண்டர்களிடமிருந்தே பா.ஜ.க தனது ஆதரவை இழந்துள்ளது.
விவசாயிகள் நலனுக்கு எதிரான, வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதையடுத்து, விவசாயிகள் ஆதரவையும் பா.ஜ.க இழந்துவிட்டது. இருக்கின்ற பணிகளையே அழித்து, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியதற்காக, இளைஞர்கள் ஆதரவை பா.ஜ.க இழந்துவிட்டது.
பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளால், பெண்களின் ஆதரவை இழந்தது பா.ஜ.க. பந்தயத்தில் தோற்க போகிற குதிரைக்கு நாங்கள் ஏன் தீணியிட வேண்டும் என, முதலாளிகளின் ஆதரவை இழந்தது பா.ஜ.க. தோல்வியை சந்திக்க இருப்பவர்களுக்கு, நாங்கள் ஏன் உறுதுணையாக இருக்க வேண்டும் என, ஊடகங்களின் ஆதரவை இழந்தது பா.ஜ.க. இதனால், தவிர்க்க முடியாத தோல்வியை நோக்கி செல்லும் பா.ஜ.க, என்ன செய்வது என்று தெரியாமல், தங்களது படகுகளிலேயே துளையிட்டு கொள்கின்றனர்" என தெரிவித்துள்ளார்.