7 கட்டமாக நடைபெறும் 18 ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் ஏப். 19 ஆம் தேதி நிறைவடைந்ததை அடுத்து நாளை 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கிடையில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. மேலும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிக்கு இடையே வார்த்தை போரும் முற்றியுள்ளது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்குக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்கப் பிரதமர் மோடிக்கு நேரம் கேட்டு மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ”கடந்த சில நாட்களாக நீங்கள் பேசுவது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இல்லை. முதல்கட்ட வாக்குப்பதிவை முடிந்ததை அடுத்து நீங்களும் உங்கள் கட்சி தலைவர்களும் வெறுப்புணர்வுடன் பேசிவருகிறீர்கள்.
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசுக்கும் எந்த அக்கறையும் இல்லை. ஏழை மக்கள் தங்களது உணவுக்குக்கூட ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். ஆனால் நீங்கள் வரிகளைக் குறைத்து கார்ப்பரேட்களுக்கான வேலை செய்கிறது உங்கள் அரசு.
இதனால்தான் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். இந்து, முஸ்லீம், கிறித்துவம், சீக்கியம், ஜெயின், பௌத்தம் என இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்குமானது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை.
2014 முதல் பா.ஜ.க அரசு லட்சக்கணக்கான கோடியை கார்ப்பரேட்டுகளுக்காக தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் விவசாயிகள் கடன் , மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்யவில்லை.
இப்போது நீங்கள் தாலியைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் உங்கள் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும்போது, அவர்களின் மனைவி, குழந்தைகளை எப்படிப் பாதுகாக்கிறீர்கள்?
அனைத்து சாதிகள், சமூகங்களில் உள்ள இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு நீதி வழங்குவதைக் காங்கிரஸ் கட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இல்லாத விஷயங்களை உங்களது ஆலோசகர்கள் தவறாக கூறுகிறார்கள். இதை நம்பி நீங்கள் பொய்யான தகவல்களைக் கூறவேண்டாம். எங்களின் தேர்தல் அறிக்கை பற்றி விளக்க உங்களை நேரடியாகச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.