நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (ஏப் 19) முதற்கட்ட தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், பாஜகவின் NDA கூட்டணிக்கு மக்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி அதிகரிப்பு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவைக்கு மக்கள் பாஜகவுக்கு தங்கள் எதிர்ப்புகளை இந்த தேர்தலின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் பாஜக வேட்பாளர்கள், பிரமணர்கள் குறித்தும், ராஜ்புத் சமூகத்தினர் குறித்தும் அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி மன்னிப்பும் கேட்டு வருகின்றனர். இதில் ராஜ்புத் சமூகத்தின் ஹரியானா, ராஜஸ்தான், உ.பி., குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றதோடு, பாஜகவுக்கு எதிராக போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளது.
இப்படி தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் இருக்க, தற்போது மேலும் ஹரியானா மாநிலத்தில் 2 பாஜக வேட்பாளர்களை மக்கள் விரட்டியடிக்காத குறையாக கேள்விகளாலே துரத்தியுள்ளனர். ஹரியானா மாநிலம் பிவானி மகேந்திரகர் தொகுதி பாஜக வேட்பாளர் தர்ம்பீர்சிங் சௌத்ரி பிரசாரத்துக்கு சென்றபோது, பொதுமக்கள் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அவர் அந்த தொகுதிக்கு வந்ததாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றாத பாஜகவுக்கு வாக்களிக்க முடியாது என்று முழக்கங்களை எழுப்பினர். இதனால் பிரசாரம் செய்ய முடியாமல் பாஜக எம்.பி அங்கிருந்து திரும்பி சென்றார்.
இந்த சம்பவம் ஒருபுறம் இருக்க, அதே ஹரியானா மாநிலத்தின் கிசார் அருகே உள்ள மிர்சாபூர் கிராமத்தில் பாஜக வேட்பாளர் ரஞ்சித் சவுதாலா பிரச்சாரத்துக்கு சென்றபோது அவருடைய வாகனத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு அவரை திருப்பி அனுப்பினர். ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் காரணமாக அங்குள்ள ஏராளமான கிராமங்களில் பாஜக வேட்பாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாஜக வேட்பாளர்களின் கார்கள் உடைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ராம நவமியின்போது தெலங்கானா ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா, மசூதியை நோக்கி வில் அம்பு எய்வது போல் செய்கை காட்டினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில், நேற்று வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில், பெண் ஒருவர் அவரை துரத்தியுள்ளார்.
இப்படி பல்வேறு பகுதிகளில் பாஜகவுக்கும், அதன் வேட்பாளர்களுக்கும் எதிராக மக்கள் தங்கள் செயல் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அனைத்தும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துகிறது.