இந்தியா கூட்டணி சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து முகப்பேர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "ஒன்றிய பாஜக அரசால் பல திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு செயல்படுத்தப்பட முடியாமல் உள்ளது. நல்லதை எந்த இடத்தில் இருந்து யார் செய்தாலும் பாராட்ட வேண்டும். கோவில் சொத்துகளை மீட்டது இந்த திராவிட அரசு தான். நியாயம் நடக்க ஒரே வழி மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
இந்த தேர்தலில் தவறாக ஓட்டு போட்டால் அடுத்த தேர்தலே இல்லாத நிலை போய்விடும். எங்கே வாழ வேண்டுமோ அங்கே இந்தி வாழட்டும். தமிழ் வாழட்டும், அதுதான் தேவை. யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதானது எதுவுமில்லை. நாடு நலம் பெற பேண்டும் என்ற எண்ணத்தை விட வேறெதுவுமில்லை. அடுத்த கட்டத்திற்கு நகர தான் அரசியலுக்கு வந்தேன். அருகதையற்றவர்கள் ஜனநாயகத்தின் நாற்காலியில் அமர நாம் வழி விடக்கூடாது.
குஜராத் மாடல் பொய்யை விரட்டியடித்த மாடல் திராவிட மாடல் அரசு. எமர்ஜன்சியின் போது தொடங்கிய போரை இன்றும் தொடர்கிறார் மு.க.ஸ்டாலின் அவர்கள். அண்ணா கூறியது போல், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது தான் திராவிட மாடல் அரசு. மழை, வெள்ளத்தின் போது ஏற்பட்ட நிதி சுமையையும் தமிழ்நாடு அரசு தான் தாங்கிகொண்டது.
மழை, வெள்ளத்தின் போது ஒரு முறை கூட வரத பிரதமர், தேர்தல் நேரத்தின் போது 8முறை வந்து சென்றிருக்கிறார். உலகில் இல்லாத வாஷிங்மிஷினை ஒன்றிய அரசு கண்டுபிடித்துள்ளது. தேர்தல் டொனேஷன் கொடுத்தால் அதை வெள்ளை பணமாக மாற்றித்தரும் பணியை பாஜக செய்கிறது.
வாக்களிக்கும் போது மக்கள் சிந்தித்து பட்டனை அழுத்தினால் நாளை நமதாகும். 10ஆண்டுகள் பாஜக நடத்தியது வெறும் ட்ரெய்லர் தான். இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக வேண்டும் என்பது மட்டுமே பாஜகவின் எண்ணம். பாஜகவை ஆள விட்டால் நாளை நாம் தெருவில் தான் நிற்க வேண்டும். அதை நடக்க விடக்கூடாது" என்று கூறினார்.