குடிசைப் பகுதி மாற்று வாரியம்
“மதராசுல மனுசன் மிருகமாகத்தான் இருக்கான்… முதுகெலும்பு ஒடிய மூட்டை வண்டி இழுக்கிறானே… குதிரைக்குப் பதிலாக நரம்பு தெறிக்கத் தெறிக்க ரிக்க்ஷா இழுத்துக் கூனிப்போயி ருக்கிறானே… நாயைப் போல சுருண்டு நடை பாதையில் குடும்பத்தோடு தூங்குகிறானே… அந்த நல்லவனை நாதியற்றவனை நாலுகால் பிராணியாய் மாற்றப்பட்ட மனிதனைச் சொன்னேன்… சென்னை புனிதமான நகரம்… இங்கே மனிதன் மிருகம்…”
முத்தமிழறிஞர் கலைஞர் வசனமெழுதி 1952-ஆம் ஆண்டு வெளியான `பராசக்தி' திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி இது. சென்னையின் அன்றைய நிலைமையை மிகக் கச்சிதமாக இந்த வசனம் பிரதிபலித்தது. `பராசக்தி' வெளியாகி 18 ஆண்டுகள் கழித்து, தான் எழுதிய வசனத்தில் இடம்பெற்ற சமூக அநீதிகளைச் சரிசெய்ய ஆட்சிப் பொறுப்பிலிருந்த கலைஞர் சட்டங்களை இயற்றினார். அதில் வெற்றியும் கண்டார். கை ரிக்க்ஷா ஒழிக்கப்பட்டது. பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இவற்றின் நீட்சியாக `ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்ற அடைமொழியுடன் `குடிசைப் பகுதி மாற்று வாரியம்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆம், இன்றைய திராவிட மாடல், முதலமைச்சர் அவர்களால் `தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என்று பெயர் மாற்றப்பட்டிருக்கும் `தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம்' முத்தமிழறிஞர் கலைஞர் சிந்தனையில் உதித்த ஒன்று.
பாட்டாளிகளைக் கைவிட்ட சட்டம்!
இந்தியா அரசியல் விடுதலை அடைந்த 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை போன்ற நகரங்களுக்கு வேலை தேடிக் குடியேறும் மக்களை அரவணைக்க `சிட்டி இம்ப்ரூவ்மென்ட் ட்ரஸ்ட்' (City Improvement Trust - CIT) என்ற ஒரு சட்டம் காங்கிரஸ் அரசால் உருவாக்கப் பட்டது. இன்றைக்கு தியாகராயர் நகரில் இருக்கும் சி.ஐ.டி நகரும், மயிலாப்பூரில் இருக்கும் சி.ஐ.டி காலனியும் அப்படியான சட்டத்தால் அமைக்கப்பட்ட குடியிருப்புகளின் தொகுப்பே ஆகும்.
கிராமப்புறப் பாட்டாளிகளை, நகர்ப்புர பாட்டாளிகளாக மாற்ற நினைத்த இச்சட்டம் சில அரசியல் செல்வந்தர்கள் கையில் சிக்கிச் சின்னாபின்னமானது. நகரை நோக்கிப் பிழைப்பு தேடி திரளாக வந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் சென்னை திண்டாடியது. வீட்டு வாடகைகள் அபரிமிதமாக அதிகரித்தன.
கிராமங்களிலிருந்து வேலைதேடி வந்த பாட்டாளிகள் முறையான வீடுகளின்றி அடையாறு, கூவம் நதிக்கரையோரங்களி லும், பக்கிங்காம் கால்வாய் ஓரத்திலும் ஓலைக்குடிசையமைத்து வாழத் தொடங்கினர். அவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியானது.
நெருப்புக்கு இரையான குடிசைகள்!
1970-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர், அன்றைய சென்னை மாவட்ட ஆட்சியர் பத்ரிநாத் தலைமையில் ஒரு குழு அமைத்தார். அந்தக் குழு சென்னையில் 43 சதவிகித மக்கள் குடிசைப் பகுதிகளிலும் நடைபாதைகளிலும் வசிப்பதாகக் குறிப்பிட்டது.
அதிகமாக இருந்த குடிசைப் பகுதிகள், அரசியல் ரீதியான சிக்கல்களையும் உருவாக்கின. சென்னை நகரத்தில் வசிப்பவர்களுள் ஐந்தில் ஒருவர் குடிசையிலும், தெரு ஓரத்திலும் வசித்து வந்தனர். தி.மு.க.வின் கோட்டையான சென்னை நகரத்திலிருந்த குடிசைகள் மீது கற்பூரம் வீசியும், பாஸ்பரஸ் உருண்டைகள் வீசியும் ஆட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் சில எதிர்ப்புச் சக்திகள் செயல்பட்டன. இதனால் உயிரிழப்புகளும், பொருள் இழப்புகளும் அதிகரித்தன.
கோடைக் காலத்தில் குடிசைகள் தீப்பற்றி எரிவது சென்னையில் சர்வ சாதாரணமாக நிகழத் தொடங்கியது. மழைக் கால வெள்ளத்தில் பல குடிசைகள் நீரில் அடித்துச் சென்றன. கழிப்பிட வசதியின்மையால் சுகாதாரமற்ற நிலை, தொற்றுநோய் ஆகியவை ஆண்டு முழுக்கத் தொடர்ந்தது. கையில் சேரும் பணமும் மருத்துவச் செலவுக்கே போதாமல் இருந்தது. இதை எல்லாம் மொத்தமாக மாற்றவேண்டும் என்ற நோக்கத்தில், 1971-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் `தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம்' என்ற திட்டம்.
ஏழு ஆண்டு இலக்கு
1960 களில் குடிசை வாழ்வோர் மாநாடுகளை நடத்திய கட்சி தி.மு.க. அந்நாட்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புகளில் ஒன்றாக இருந்த குடிசை வாழ்வோர் சங்கத்தின் தலைவராக இருந்த இராம.அரங்கண்ணல் அவர்களையே குடிசைப் பகுதி மாற்று வாரியத் தலைவராக நியமித்தார் முதலமைச்சர் கலைஞர்.
1971 - ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி, சைதாப்பேட்டையில் குடிசைப் பகுதிகள் மாற்று வாரியம் சார்பில், புதுக் குடியிருப்புகள் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார் கலைஞர். சைதாப்பேட்டையில் 30 லட்சம் செலவில் 402 இல்லங்கள், தியாகராயர் நகரில் 37 லட்சம் செலவில் 500 குடியிருப்புகள், கோட்டூர்புரத்தில் 1 கோடியே 30 லட்சம் ரூபாயில் 1,848 குடியிருப்புகள், மீனவர்களுக்காக நொச்சிக் குப்பத்தில் 1,000 வீடுகள், அயோத்தியா குப்பத்தில் 678 வீடுகள், டொம்மிங் குப்பத்தில் 240 வீடுகள், விசாலாட்சித் தோட்டத்தில் 768 வீடுகள் என சென்னை நகரம் முழுக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தவணை முறையில் சொந்த வீடு
சென்னையில் தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னாளில் தமிழ்நாடு முழுக்கவும் நீட்டிக்கப்பட்டது. புதிதாக உருவாகும் குடிசைகளைத் தவிர்க்கவும் அதே சமயம் புது வீடுகளில் குடியேறிய பின் அவர்கள் அதை வாடகைக்கு விடாமல் தடுக்கவும் அடையாள அட்டை ஒன்றும் வழங்கப்பட்டது. குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகத்தில் இப்படங்கள் பாதுகாத்து வைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
1990- ஆம் ஆண்டு குடியிருப்புகளை, தவணை முறையில் சொந்தமாக்கும் ஒரு திட்டத்தையும் தலைவர் கலைஞர் அறிவித்தார். வாழ்விட உரிமையை உறுதிசெய்யும் வகையில் மாதந்தோறும் குறைந்தபட்ச வாடகையை வசூலிக்கும் வகையில் இத்திட்டம் அமைந்திருந்தது. 1971- ஆம் ஆண்டு மார்ச் வரை கட்டப்பட்ட வீடுகளில் குடியிருப்போர் மாதம் ரூபாய் 50 வீதம் 10 ஆண்டுகளுக்கும்,1971-1975- ஆம் ஆண்டு வரை ரூபாய் 75 வீதம் 10 ஆண்டுகளுக்கும், 1990 முதல் ரூபாய் 150 என்ற வீதம் 20 ஆண்டுகளுக்கும் என இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
வீடல்ல... வாழ்க்கை மேம்பாடு!
2008-ஆம் ஆண்டு, பழுதான வீடுகளை இடித்து விட்டு அதே இடத்தில் புது வீடு கட்டித்தரும் அறிவிப்பையும் குடிசைப் பகுதி மாற்று வாரியம் வெளியிட்டது, 270, 280 சதுர அடிகளிலிருந்த வீடுகளுக்குப் பதில் தற்போது 420 சதுர அடியில் குடியிருப்பு கட்டித் தர முடிவெடுத்துள்ளது நமது திராவிட மாடல் அரசு.
1.60 லட்சம் குடிசை மாற்று வாரிய வீடுகளை ரூ.2,080 கோடியில் சீரமைக்க நிதியும் ஒதுக்கியுள்ளது. தீக்கிரையாகும் குடிசைகள் இன்றைக்குச் சென்னையில் தேடினாலும் கிடைக்காது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண வேண்டும் என்பது காலம் கடந்தும் தமிழ்நாடு அரசின் மைய நோக்கமாக இருப்பதே கலைஞர் கண்ட கனவின் வெற்றி.
வலம் வருவோம்