தமிழக மீனவர் பிரச்சனைக்கு மாநிலங்களவையில் அழுத்தமாக குரல் கொடுப்பேன், திமுகவில் உழைத்தவர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணம், புதுக்கோட்டையில் புதிதாக பொறுப்பேற்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா பேட்டியளித்துள்ளார்.
திமுக சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா இன்று அவர் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வருகை தந்தார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் எம்எம்.அப்துல்லா கூறுகையில்:
தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மாற்றாந்தாய் மனப்பான்மையில்தான் தொடர்ந்து ஒன்றிய அரசு செயல்பட்டு வருகின்றது. தமிழக மீனவர் பிரச்சனைக்கு மாநிலங்களவையில் அழுத்தமாக குரல் கொடுப்பேன். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிபவர்கள் கொரோனா காலத்தில் விசா முடிந்து வேலை இல்லாமல் அங்கேயே உள்ளனர்.
அதேபோல் நாடு திரும்பியவர்கள் மீண்டும் அங்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு தீர்வு ஏற்படுத்தப்படும். மாநிலங்களவையில் கட்சி என்ன கொள்கை சார்ந்த முடிவு எடுக்கிறதோ அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். திமுகவில் உழைத்தவர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணம் என்றும் அப்துல்லா கூறினார்.