தி.மு.க

“கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுவார் நம் தங்கநிகர்த் தலைவர்” - ஜெகத்ரட்சகன் எம்.பி. வாழ்த்துமாலை!

“‘தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ' என்று உதயசூரியனின் ஒளி வெள்ளத்தை உள்வாங்கி ஒளிரப் போகிறார் நம் தங்கத் தலைவர் தளபதி.”

“கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுவார் நம் தங்கநிகர்த் தலைவர்” - ஜெகத்ரட்சகன் எம்.பி. வாழ்த்துமாலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்!

புன்மை இருட்கணம் போயின யாவும்!

எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி

எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி' - என்று தேசத்தின் விழிப்புக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடினார் தீந்தமிழ்க் கவியரசர் பாரதியார்.

விதைத்த சொல்லனைத்தும் விதை நெல்லாக்கிய அந்த வித்தகரைப் போலவே.. தேமதுரத் தமிழ்நாட்டின் திருவிழிகள் திறந்த விழிப்பையும் சிறப்பையும் வியந்து நயந்து திருப்பள்ளியெழுச்சி பாடித்தித்திக்க வேண்டிய திருநாள் வந்துவிட்டது.

இன்னும் சில திங்களில் இருநூற்று முப்பத்துநான்கு போர்க்குதிரைகள் பூட்டிய புரட்சித்தேரில் உலா வரப் போகிறான் - உதயசூரியன்! ‘தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ' என்று உதயசூரியனின் ஒளி வெள்ளத்தை உள்வாங்கி ஒளிரப் போகிறார் நம் தங்கத் தலைவர் தளபதி.

உருகும் பனிக்கட்டியில் உஷ்ணத்தை ஏற்றவும், பொழியும் மழைச்சரத்தைக் கூட தீச்சரமாய் மாற்றவும் வல்ல பேராற்றல் படைத்த பெரும்படை- அவருக்குப்பின்னால் நிற்கிறது. புருவங்கள் பொட்டுக்கு ஏற- பூவுலகை வசந்தமாக்கும் புத்திளைஞர் திருக்கூட்டம்- கலைஞரின் தமிழைப் போல் கவசமாய் அவருக்கு முன்னால் நிற்கிறது.

‘செல்லும் இடமெல்லாம் வெல்லும் கழகம்' எனும் சொல்லும்- சூழ்நிலையும் தலைதூக்கி நிற்கிறது. வடகோடி தென் கோடி வாழ்கின்ற பல கோடி அடலேறுகள் கூடி அணிவகுத்து நிற்கிறார்கள். தாய்க்கருவில் இருக்கும்போதே தமிழோசை கேட்கும் தவப்பயன் பெற்ற நம் தலைவர் தளபதி-போகும் இடமெல்லாம் புகழோசை கேட்டுப் பூரித்துப்போகிறார்.

தள்ளரிய பெருநீதி தழைத்த தமிழகத்தில் தருமச் சக்கரத்தின் தடம் புரண்டு கிடப்பதால்- கவலைச்சக்கரத்தில் காலத்தேர் ஓட்டுகிற ஏழைப்பிறவிகளின் கண்ணீர் துடைக்கும் கைக்குட்டையாகி-களம் பல காண்கிறார். ‘புலம்புவதால் மட்டும் புரட்சி வந்திடாது. கிளம்புங்கள்' என்று கிளர்ச்சியூட்டி- கிராம மக்கள் சபைகளின் எழுச்சியின்மூலம் வரலாற்றுத் திருப்பத்துக்கு வழிசெய்திருக்கிறார்.

தளர்ந்து கிடந்த தசைகளுக்குத் தன்மானப் பயிற்சி கொடுத்து- புதிய திசைகளுக்குத் திறப்பு விழா நடத்தத் தேதி குறித்து வருகிறார்- நம் திராவிடத்தளபதி. மகுடத்திற்காக மகுடிகள் ஊதிப் பழக்கப்பட்டவர்களுக்கு முன்னால் தகுதிகளின் உச்சத்தில்-தனக்கு நிகர் தானே எனத் தலைநிமிர்ந்து நிற்கிறார் நம் தானைத் தலைவர் தளபதி. இமயமலையின் இன்னொரு சிகரமாய் நம் தமிழரின் தலையும் நிலையும் உயர வேண்டுமென்றால்- தளபதியின் அலையில் நாமும் சங்கமிக்க வேண்டுமென்று அரசியல் கலவாத பொதுமக்களும் ஆர்வத்தோடு அணிதிரண்டு நிற்கிறார்கள்.

“கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுவார் நம் தங்கநிகர்த் தலைவர்” - ஜெகத்ரட்சகன் எம்.பி. வாழ்த்துமாலை!

‘பார் சிறுத்தலின் படை பெருத்ததோ படை பெருத்தலின் பார் சிறுத்ததோ' என்னும் கலிங்கத்துப்பரணியின் சந்தேகம், தளபதி தடம் பதிக்கும் இடமெல்லாம் ஏற்படுகிறது என்பதால் இருண்டு போய்க்கிடக்கிறார்கள்-நம் எதிரிகள். பறவைகளின் சரணாலயம் வேடந்தாங்கல் என்பதைப்போல, தமிழர்களின் சரணாலயம் இனிமேல் அறிவாலயம்தான் என்றாகி விட்டது.

விரலின் அசைவில் இலக்கியங்கள் பிறக்க- குரலின் அசைவில் கொள்கைப் போர் நடக்க- செயலின் அசைவில் வரலாறு படைக்க வாழ்ந்தாரே நம் முத்தமிழறிஞர் கலைஞர்- அவரது எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் வானம்பாடியாய், சிறுபொழுதும் ஓய்வின்றி வைகறை வானத்தில் சிறகடித்து வருகின்றார்- நம் சித்தாந்தங்களைச் சிறைமீட்க வந்த செந்தமிழ்த் தளபதி!

அக்கறையே வடிவமாய் அரசியலில் களமாடி- எக்கறையும் இல்லாத இலட்சியத் தலைவராய் ஏறுநடை போட்டு எக்காளம் இடுகிறார் நம் தலைவர் தளபதி. நேற்றைய மழையில் இன்றைக்கு முளைத்த காளான்கள்- சரித்திரப் பக்கங்களின் சால் பறியாத சாத்தான்கள்- அவருக்கு எதிராய் ஆயிரம் வலைகளை வீசி வைத்துக் காத்திருக்கிறார்கள்.

இமைக்கும் முன்னே இலக்கைத் தாக்கி இல்லாமல்ஆக்கும் - ‘கலைஞரின் கருவறையில் உருவான 'ஏவுகணையை எதிர்க்கவோ தடுக்கவோ - எத்தனை வலைகள்- எத்தனை தலைகள்- எத்தனை மலைகள் முயன்றாலும் அத்தனையும் வீழ்த்தி, கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றி அகிலமே வியக்க அரியாசனத்தில் அமர்வார் நம் தளபதி!

ஈட்டியை விடக் கூர்மையாய் அவர் ஈட்டிவைத்திருக்கும் நேர்மை- சிவப்புக் கம்பளம் விரித்து அவரைச் சிம்மாசனத்தில் அமர்த்தியே தீரும்!‘ தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழனுக்குத் தடைசெய்யும் நெடுங்குன்றம் தூளாய்ப் போகும்!' என்பார் பாவேந்தர் பாரதிதாசன்.

இளமை அரும்பி இதழ் விரிக்கும் முன்பே சிறைக்கோட்டம் கண்ட செந்தமிழ்க்காளை நம் தளபதி- தடைகளை உடைத்தெறியும் தத்துவப்படை நடத்தி வெற்றிகளைக் குவித்த தமிழினத் தலைவர் கலைஞரின் தயாரிப்பு அல்லவா!

கலைஞரின் தமிழ் தோற்றதுண்டா? கலைஞரின் சட்டசபைச் சரித்திரம் வெற்றியைத் தவிர வேறெதுவும் கண்டதுண்டா? அதேபோல- கலைஞரின் பிள்ளைத் தமிழுக்கும் இனிமேல் வெற்றிதான்!

வெற்றியைத் தவிர வேறெதுவும் இல்லை. எதிரிகள் அனைவரையும் உதிரிகள் ஆக்கி உடைத்தெறியப் போகும் அவரது உத்தியின் உச்சியில்... ‘உதிக்கப் போகிறான் உதயசூரியன்' என்பதில் ஒரு துளியும் ஐயமில்லை.

காரணத்தோடு தோரணம் கட்டுங்கள்- கழகத் தங்கங்களே..!

பூரண நம்பிக்கையோடும் புத்துணர்ச்சியோடும் களமாடுங்கள்-கழகச் சிங்கங்களே..! ‘எதிர்காலத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நம் தளபதி' என்பதைக் காலம் முன் கூட்டியே பதிவு செய்து விட்டது.

‘திங்களொடும் செழும் பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம். நாங்கள் ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்று சிறியோர்க்கு ஞாபகம் செய்! முழங்கு சங்கே!' என்று எட்டுத்திக்கும் கொட்டி முழக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.

காலக்கொடையாய்த் தமிழர்க்குக் கிடைத்த நம் கலைஞரின் புதல்வர்- நாளைய முதல்வர் - என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே, தளபதியின் இந்தப் பிறந்த நாள் இதுவரை இல்லாத இன்பத்தைச் சுமந்த திருநாள் ஆகிறது.

சொல்லுங்கள் தமிழர்களே... வாழ்க தமிழகம்! வாழ்க கலைஞர் புகழ்! சீராண்டு பேராண்டு நூறாண்டு - நாடாண்டு வாழ்க வாழ்கவே நம் தலைவர் தளபதி!

- டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., மத்திய முன்னாள் இணை அமைச்சர்

நன்றி: முரசொலி

banner

Related Stories

Related Stories