13 ஆயிரம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க அளிக்கப்பட்ட விளம்பரத்தில் இந்தி மொழி தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது ஏன் என கேள்வி எழுப்பி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு தி.மு.க. மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுகாதார மற்றும் மக்கள் நல நிறுவனத்தின் 13 ஆயிரம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க அளிக்கப்பட்ட விளம்பரத்தில் இந்தி மொழி தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, இந்த அவசர கடிதத்தை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, பல்வேறு நிலைகளில் 13 ஆயிரம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க அளிக்கப்பட்டுள்ள சுகாதார மற்றும் மக்கள் நல நிறுவனத்தின் விளம்பரத்தில், விளம்பரப்படுத்தப்பட்ட தேதி, நீட்டிக்கப்பட்ட தேதி, விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகியன குறித்த தெளிவான விவரங்கள் கொடுக்கப்படாமலும், 200 மதிப்பெண்களுக்கு 40 மதிப்பெண்கள் இந்தி மொழியில் கட்டாயமாக எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தி மொழி தெரியாத மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
60 சதவிகிதத்திற்கும் மேலுள்ள இந்தி தெரியாத, இந்திய மாணவர்களுக்கு, சம வாய்ப்புகள் வழங்கப்படாத நிலையில், சுகாதார மற்றும் மக்கள் நல நிறுவனத்தின் விளம்பரம் அனைத்திந்திய அளவில் மத்திய சுகாதார குடும்ப நலத்துறை வேலை வாய்ப்புகளில், பெரும் தீமையை விளைவிப்பதாக உள்ளது.
இந்திய அரசியல் சட்டத்திற்கும், நீதித்துறையின் வழிகாட்டுதலுக்கும் எதிராக 13 ஆயிரம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் அனைத்திந்திய அளவிலான இந்திய அரசின் தேர்வு இந்தி தெரியாத, இந்திய மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை நிராகரிக்கும் வகையில் மிகப்பெரும் பாரபட்சமாக அமைந்துவிடும்.
எனவே இந்தப் பிரச்னையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலையிட்டு சட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும், இந்த தேர்வினை உடனடியாக ஒத்திவைக்கவும் ஆவன செய்யவேண்டும் என டி.ஆர்.பாலு தனது அவசர கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.