கொரோனா அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இந்த இணையவழி வகுப்புகளில் பல்வேறு குளறுபடிகளும், சிக்கல்களும் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன.
மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்கான ஸ்மார்ட் ஃபோன், இணைய வசதி இல்லாத கொடுமையால் தற்கொலைகளும் நிகழ்கின்றன. இந்த நிலையில், ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்க 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் சாக்கடைக் கழிவுகளை சுத்தம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் சாம் என்னும் மாணவன் ஆன்லைன் வகுப்பு படிக்க செல்போன் வாங்க பணம் இல்லாததால், கோயம்பேட்டில் சாக்கடை கழிவுக்குள் இறங்கி சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் பிரபல ஆங்கில நாளிதலில் வெளியானது. இந்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனையடுத்து, இணைய வழி கற்பித்தலுக்கு மின் வசதி, இணையத்தளத் தொடர்பு, கணினி, ஸ்மார்ட் போன் போன்ற வசதிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்திருக்கின்றதா?, ஒரே குடும்பத்தில் இரண்டு, மூன்று குழந்தைதள் இருப்பவர்களுக்கு தனித்தனியே அனைத்து வசதிகளுக்கும் உள்ளதா? என்பதையும் பார்க்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், நாளிதழில் வந்த செய்தியை அறிந்த சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏவின் ஏற்பாட்டின் பேரில் ஆன்லைன் வகுப்புக்காக கழிவுக் குழிக்குள் இறங்கி பணியாற்றிய 12ம் வகுப்பு மாணவனுக்கு தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் லேப்டாப்பும், டேட்டா கார்டையும் வழங்கியுள்ளார்.