பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் விழா மாநிலம் முழுவதும் தி.மு.கவினரால் தக்க தனிமனித இடைவெளியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி, திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
முன்னதாக தி.மு.க தொண்டர் படை சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
மேலும், அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.கழக கொடியை ஏறிவைத்து பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆகியோரது திரு உருவ படத்துக்கு தலைவர் மு.க.ஸ்டாலினும், பொதுச்செயலாளர், பொருளாளர் என பலரும் மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து “இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில சுயாட்சி என்ற அவரது மூன்று கொள்கை தீபங்களை எந்நாளும் காப்போம்! கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டை எந்நாளும் கடைப்பிடிப்போம்!” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.