ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். குடிமைப்பணி பிரதான தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என தி.மு.க. எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் மட்டும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுப் பிரிவினருக்கு 751, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 718, தாழ்த்தப்பட்டோருக்கு 706, பழங்குடியினருக்கு 699 என கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,. பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 696 என குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், சிவில் சர்வீஸ் தேர்வில் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் பெற்ற மதிப்பெண்களை விட உயர் வகுப்பினர் குறைந்த மதிப்பெண்களையே பெற்றுள்ளனர். சமூக இட ஒதுக்கீடு திறமைக்கு தரப்படும் நியாயமான அங்கீகாரம் ஆகும் என கனிமொழி எம்.பி குறிப்பிட்டுள்ளார்.