தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற இளைஞருக்கு டீக்கடை வைக்க உதவுவதற்காக 1 லட்ச ரூபாய் திரட்டும் பணியை தி.மு.க எம்.பி மருத்துவர் செந்தில்குமார் ட்விட்டரில் தொடங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். இவர் சிறுவயதிலேயே தந்தையையும், தாயையும் இழந்தவர். அதன் பின் விருதுநகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வந்துள்ளார்.
பள்ளிப் படிப்பை முடித்து பி.எஸ்.சி பட்டப் படிப்பையும் முடித்து, சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் வேலை தேடியுள்ளார். வேலை கிடைக்கவில்லை என்பதால் மெரினா கடற்கரையில் தங்கியுள்ளார். அப்போது அவருடைய கல்வி சான்றிதழ்கள் உட்பட அனைத்தும் திருடப்பட்டுள்ளன.
அதன் பின் என்ன செய்வது என தெரியாமல் வழிப்போக்கனாக திரிந்திருக்கிறார். அதன் பின் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூருக்குச் சென்றுள்ளார். ஊரடங்கு காலத்தில் டீ தயார் செய்து விற்கலாம் என்ற எண்ணம் தமிழரசனுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கான முதலீட்டை பிச்சை எடுத்துச் சேகரித்துள்ளார்.
அந்த பணத்தை வைத்து டீ தயார் செய்து சைக்கிளில் வைத்து வீதி வீதியாக சென்று விற்பனை செய்துள்ளார். அதில் வந்த வருமானத்தைத் தன்னை போல் ஆதரவற்றோருக்கு உணவு தயாரித்து இலவசமாக விநியோகித்து வருகிறார்.
இவரது கதையை அறிந்த தி.மு.க எம்.பி மருத்துவர் செந்தில்குமார் தமிழரசனுக்கு டீ கடை தொடங்குவதற்கு 1 லட்ச ரூபாய் சேகரிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக #HelpForSettingTeaShop என்ற ஹேஷ்டேகை உருவாக்கி அதன் மூலம் பணம் திரட்டும் பணியைத் தொடங்கியுள்ளார்.