தி.மு.க

“அப்பா! உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது இந்த வாழ்வின் பெரும் பேறு” - கனிமொழி நெகிழ்ச்சி!

தலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடனான நினைவலைகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி.

“அப்பா! உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது  இந்த வாழ்வின் பெரும் பேறு” - கனிமொழி நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காலம் என்பதால், ஆடம்பர கொண்டாட்டங்கள் இல்லாமல், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து கலைஞரின் புகழை போற்றுமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் நலத்திட்ட உதவிகளை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேச்சமயத்தில், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தமிழினத் தலைவர் கலைஞரின் புகழை நினைவுக் கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், கலைஞரின் மகளுமான கனிமொழி எம்.பி. “ உங்களைப்போல் ஒரு தலைவரை தந்தையாகவும் பெற்றது பெரும் பேறு” எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் தனது நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

அதில், “ஒரு நாள் தலைவரோடு, அறிவாலயத்தில் அவரது அறையில் நின்றுக் கொண்டிருந்தேன். மாலை நேரம்; பல ஊர்களில் இருந்து கழகத் தோழர்கள் தலைவரை சந்திக்கக் காத்திருந்தார்கள். துறைமுகம் காஜா அவர்களை ஒவ்வொருவராக அறைக்குள் அனுப்பிக் கொண்டிருந்தார்.

அப்போது 75 அல்லது 80 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் அறைக்குள் வந்தார். எண்பது வயதைத் தாண்டியிருந்தத் தலைவரை பார்த்து அவர் “எப்படி இருக்க? என்னை உனக்கு ஞாபகம் இருக்கா?” என்றபடி உள்ளே நுழைந்தார். அவரது தொனியில், “நீ கட்சி தலைவராயிட்ட; முதலமைச்சராவேற ஆயிட்ட; உனக்கெப்படி என்னை எல்லாம் நினைவு இருக்கும்? என்ற எள்ளல் ததும்பி வழிந்தது.

சுற்றி நின்றவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி. பெரியவர் அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்ற எச்சரிக்கை பற்றிக்கொண்டது. ஒரு இறுக்கம். தலைவர் முகத்திலோ ஒரு மந்தகாசப் புன்னகை பூத்தது. கருப்புக் கண்ணாடிக்குள்ளும் கண்களில் படந்த குறும்பு தெரிந்தது.

“ஏன் ஞாபகம் இல்லை” என்று அவரைப் பெயர் சொல்லி அழைத்தார். “பார்த்துப் பலவருடம் ஆயிடுச்சு” என்றார். அதுவே எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவர் அடிக்கடித் தலைவரை வந்து சந்திக்கக் கூடியவர் இல்லை. அடுத்து தலைவர் கேட்டார், “நான் போனவாரம் கூட உங்க ஊருக்கு பொது கூட்டத்துக்கு வந்தேனே; உன்ன கூட்டத்தில் தேடிப் பார்த்தேன். நீ வரலயே.” அதற்குள் அந்த பெரியவர் கொஞ்சம் நெளிந்தார்.

“இல்ல, என் மகளோட கணவர் வீட்ல ஒரு உறவுக்காரர் இறந்துட்டார். அங்க போகும்படி ஆயிடுச்சு. நீ வந்தப்ப இல்லயேன்னு தான் பாக்க வந்தேன்” ஒரு பேரியக்கத்தின் தலைவனுக்கும், அடிப்படைத் தொண்டனுக்குமான உரையாடல் இது. அறையில் இருந்த நானும் மற்றவர்களும் நெகிழ்ச்சியோடு அதை பார்த்துக் கொண்டிருந்தோம். அவர், “உடன்பிறப்பே!” என்று அழைப்பதும்; கூட்டம் அலைகடல் என ஆர்ப்பரிப்பதும் மனதில் பேரிசையாக வியாபித்தது.

அப்பா! உங்களைப் போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது மறுபிறவியற்ற இந்த வாழ்க்கையின் பெரும் பேறு.” என கனிமொழி எம்.பி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories