முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்
"தமிழ்த்தாயின் ஆண்வடிவமே!
மூத்த தமிழினத்தின் முழு உருவமே!
எங்களின் உயிரின் உயிரே!"
- என்ற தலைப்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவைப் போற்றி ட்விட்டரில் செய்தி பகிர்ந்து காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியுள்ளதன் விவரம் பின்வருமாறு :
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!” - என்ற சொற்றொடரை காந்தக்குரலில் உச்சரித்து லட்சக்கணக்கான உடன்பிறப்புகளைச் சொக்கவைத்து அவர்தம் உள்ளங்களில் புத்துணர்ச்சியையும் ரத்தத்தில் புதுச் சூட்டையும் உற்பத்தி செய்கின்ற நம் ஆருயிர்த் தலைவர்!
கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கெல்லாம் கலங்கரை விளக்காகவும், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய இனத்தின் இன்ப மொழியாம், ஏற்றமிகு தமிழின் தனித் தத்துவ விளக்கமாகவும் வாழ்ந்த முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு 97-ஆம் ஆண்டு பிறந்தநாள் - ஜூன் 3!
ஆம், அதுதான் அந்தத் தமிழ்ப் பொதிகை, அகிலம் போற்றும் திராவிடச் சூரியன், உதயமான நாள். ஜூன் 3-ஆம் நாள்!
கலைஞர் - மாபெரும் மக்கள் இயக்கத்தின் மகத்தான தலைவர் மட்டுமல்ல; கலைஞர் - கழகத்தின் அரை நூற்றாண்டு தலைவர் மட்டுமல்ல; கலைஞர் - கன்னித்தமிழ் நாட்டின் தலைவர் மட்டுமல்ல; கலைஞர் - மூத்த தமிழினத்தின் முத்தான தலைவர்! கலைஞர் - ஜனநாயகத்தின் காவலர்! கலைஞர் - இந்த நூற்றாண்டின் சரித்திரத் தலைவர்! இன்னும் மூன்றே ஆண்டுகளில் நூற்றாண்டு விழா காணப்போகும் தலைவர்!
அவரை வயதும் உடலும் அனுமதித்திருக்குமானால், அந்த தமிழ்த்தாயின் ஆண்வடிவமாக இன்று கம்பீரமாக வீற்றிருந்திருப்பார்.
'எங்களை வாழ்த்துங்கள்' என்று நாமனைவரும் அவர் தாள் பணிந்து வணங்கி நின்றிருப்போம். காலம் அவரை நம்மிடமிருந்து கண்காணாத தூரத்துக்கு எடுத்துச் சென்று தன்னோடு கருவூலமாக வைத்துப் பாதுகாத்துக் கொண்டுவிட்டது.
வங்கக் கடலோரம் கடலலையின் வாஞ்சை மிகுந்த தாலாட்டில் தனது ஆருயிர்த் தலைவராம் அண்ணாவுக்கு அருகில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் என் உயிரான தலைவரே!
உன்னிலிருந்து என்னை எடுத்து உருவாக்கிய உயர்வான தந்தையே!
உங்களின் 97-வது பிறந்தநாளில் வாழ்த்தி வணங்கவும், உங்களிடமிருந்து வாழ்த்துகளை வாங்கவும் நீங்கள் கோயில் கொண்டுள்ள கோபாலபுரம் வந்திருக்கிறேன். உங்கள் உருவம் இல்லை!
எனக்கு வாழ்நாள் பாடமாய் இருக்கும் உங்கள் திருவுருவப்படம் இருக்கிறது. ஆனால், உங்கள் உணர்ச்சியை இங்கே பெறுகிறேன்.
உங்கள் முதல் பிள்ளையின் வீடாம் முரசொலிக்கு வந்திருக்கிறேன். உங்கள் உருவமில்லை!
உங்களின் உருவத்தில் எழுத்துகள் இருக்கின்றன. இங்கே உங்கள் கரகர குரல் காதில் கேட்கிறது.
உங்களது முழுநேர மூச்சுக்காற்றாம் அண்ணா அறிவாலயம் வந்திருக்கிறேன். உங்கள் உருவம் இல்லை!
நீங்கள் இடும் கட்டளைக்காகக் காத்திருக்கிறது.
உங்கள் குரலும் குரலின் உங்கள் உணர்ச்சியும் நாள்தோறும், நாளின் நொடிதோறும் என்னை வழிநடத்துகிறது. எம்மை வாழ்வாங்கு வாழவைத்துக் கொண்டிருக்கிறது. மேடைக்குப் போனால் எல்லோரையும் வெல்லும் குரல் உங்களுடையதாகத்தான் இருக்கும். எழுதிக்காட்டினால் எல்லோருடைய எழுத்தையும் மிஞ்சி உங்கள் எழுத்து விண் உயர்ந்து நிற்கும்.
அரசியலில் மட்டுமா நீங்கள் ஆட்சி செய்தீர்கள்? இலக்கியத்தையும் எங்கே விட்டுவைத்தீர்கள்! இலக்கியம் மட்டுமா, திரையுலகில் உங்கள் தமிழ் ஆட்சியும் மாட்சியும் மறையாது.
நீங்கள் ஆட்சி செய்த முறைகள், நிறைவேற்றிய சட்டங்கள், நீங்கள் உருவாக்கிய திட்டங்கள், உங்களால் படித்தவர்கள், உங்களால் வேலை பெற்றவர்கள், உங்களால் முன்னேறியவர்கள், உங்களால் வாழ்க்கை பெற்றவர்கள், வளம் பெற்றவர்கள் எத்தனை லட்சம் பேர் தலைவரே! இவர்களை முன்னேற்றுவதுதானே உங்கள் லட்சியம் தலைவரே! தனக்காக அல்ல; இந்த தரணிக்காக வாழ்ந்த வாழ்க்கை உங்களுடையது!
''நமக்கு கிடைத்த பொக்கிஷம் கலைஞர்" என்றார் தந்தை பெரியார்.
"தமிழகத்தின் எதிர்காலம் இவர் கையில் இருக்கிறது" என்றார் மூதறிஞர் ராஜாஜி.
"அவரை விட்டால் யார் இருக்கிறார்கள்?" என்றார் பெருந்தலைவர் காமராஜர்.
"என்னுடைய நல்ல தம்பி" என்றார் பேரறிஞர் அண்ணா.
"திருவாரூரின் புலி இளைஞர்" என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
"லட்சியத்துக்காகவே வாழ்பவர்" என்றார் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்.
"கலைஞர் எந்த நாற்காலியில் உட்கார்கிறாரோ, அந்த நாற்காலிக்குப் பெருமை" என்றார் பாபு ஜெகஜீவன் ராம்.
"பெரியார், அம்பேத்கர் கொள்கைகளுக்கு வலுசேர்த்தவர்" என்றார் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் கே.ஆர்.நாராயணன்.
"ஒரு போர் வீரனுக்குரிய அறிவையும் ராஜதந்திரிக்கு உரிய அடக்கத்தையும் பெற்றவர்" என்றார் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.
"புதிய புறநானூற்றைப் படைக்கும் புரவலர்" என்றார் தவத்திரு. குன்றக்குடி அடிகளார்.
இத்தனைபேர் பாராட்ட, பார் போற்ற வாழ்ந்த நீங்கள் எங்கள் தலைவர் என்பதைவிட எங்களுக்கு என்ன பேறு வேண்டும்!
நீங்கள் நினைத்த காரியங்கள், மேலும் ஆற்ற நினைத்த தொண்டுகள், உங்களின் கனவுகள், உங்களின் லட்சியங்கள் அனைத்தையும் எங்கள் தோள்மேல் போட்டு பயணம் தொடர்கிறோம் தலைவரே!
எல்லா திசையிலும் உங்கள் பிள்ளைகள். எங்கு நோக்கினும் உங்கள் மாணவர்கள். தமிழின மேன்மையே எங்கள் எல்லைகள். கலைஞரின் தொண்டர்கள் என்றைக்கும் சோடை போனதில்லை என்பதை நிரூபித்துக்காட்டுவோம் தலைவரே!
நூற்றாண்டை நெருங்குகிறது உங்கள் வயது. பலப்பல நூற்றாண்டுகள் பரவியிருக்கும் உங்கள் புகழ்.
'கலைஞர் வாழ்க’
‘கலைஞர் வாழ்க’
‘கலைஞர் வாழ்க'
- இதைச் சொல்லும்போது கிடைக்கும் எரிசக்திக்கு இணையானது எதுவுமில்லை!
கலைஞர் வாழ்க! முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க!
எத்திசையும் ஏத்தும் எம் கலைஞர் வாழ்க! வாழ்க!!
இவ்வாறு அவர் கலைஞர் புகழ் போற்றி பேசியுள்ளார்.