தி.மு.க தலைவர் மு.கஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (24.5.2020), காலை, காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.
அதில், அதி விரைவில் அ.தி.மு.க அரசின் ஊழல் பட்டியல் வெளிக்கொணரும் வகையில் மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, மண்டல வாரியாக 7 சட்டப் பாதுகாப்புக்குழு அமைத்து தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் விவரம் பின்வருமாறு:-
“ஆளும் அ.தி.மு.க மற்றும் மத்திய பா.ஜ.க அரசுகளால் கழகத் தோழர்கள் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை எதிர்கொள்ளவும், ஆளும் அ.தி.மு.க அரசின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளின் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளவும் அவர்களின் ஊழல்களை வெளிக்கொணர்ந்து அவற்றின் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தி.மு.க. தலைவர் உள்ளிட்ட முன்னணியினர் மீது ஆளுங்கட்சியினரால் பரப்பப்படும் பொய்யான, தரந்தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இக்குழு தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படுகிறது.
அதன்படி, அறிவிக்கப்படும் குழுக்கள் அந்தந்த மாவட்டக் கழக செயலாளர்/பொறுப்பாளர்களுடன் இணைந்து மாதந்தோறும் கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி அது குறித்து தகவல்களை தலைமைக் கழகத்திற்கு தெரிவித்திட வேண்டும்.
புகார்கள் அளிப்பதற்கு ஏதுவாக, அதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை சேகரித்து புகார் மனுக்களை சேகரித்த தகவல்களை திமுக சட்டத்துறையின் dmklegalwing@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, அவர்களின் ஒப்புதல் பெற்று அவற்றை முறையாக தொடர்புடைய அதிகாரிகளிடம் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அப்படி அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் ஏற்படுமேயானால் அதுகுறித்த ஆலோசனைகளை திமுக சட்டத்துறையிடம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.