தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க தலைவர் திருமாவளவன், சி.பி.ஐ மாநிலச் செயலாளார் முத்தரசன், சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ஐ.யூ.எம்.எல் தலைவர் காதர் மொய்தீன், ம.ஜ.க. தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் நிவாரணம் மற்றும் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டிய உதவிகளில் மெத்தனம் காட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, கொரோனா தடுப்பு பணி குறித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில், கொரொனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் சிறப்பு நிவாரணமாக ரூ.5,000 வழங்க வேண்டும்.
பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் மேலும் செய்வதில் தாமதம் இருக்கக் கூடாது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்ற வேண்டும்.
பொருளாதார நிவாரண உதவிகளுக்கு புதிய செயல் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.