இந்தியாவில் பரவிவரும் கொரோனா தமிழகத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித முன்னேற்பாடுகள் இன்றி அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நாட்டு மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இப்படியிருக்கையில், ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்த உதவிகளும் தமிழகத்தில் பெரும்பாலான ஏழை மக்களுக்குச் சென்றடையவில்லை. மேலும் பாதுகாப்பு உபகரணமின்றி மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பல இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க மற்றும் தி.மு.க அமைப்புகள் சார்பில் தூய்மை தொழிலாளர்கள், வெளிமாநிலத்தவர்கள், ஏழை எளியோர், ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் தி.மு.க இளைஞரணியைச் சேர்ந்த பலரும், நிர்வாகிகளும் நேரடியாக உதவித் தேவைப்படுவோர் இல்லங்களுக்குச் சென்று உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி தனது சொந்த செலவில் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அப்பகுதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தினருக்கு வழங்கியிருப்பது பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
பட்டுக்கோட்டை கிழக்கு தி.மு.க ஒன்றியச் செயலாளர் பார்த்திபன். இவர் கொரோனா ஊரடங்கு கொண்டுவந்ததில் இருந்து தி.மு.க தலைமைக் கழகத்தின் அறிவிப்பின் பேரில் தங்கள் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
குறிப்பாக தன்னுடைய சொந்த செலவில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 500 ரூபாய் மதிப்பிலான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை வழங்கியுள்ளார். அதற்காக பார்த்திபனே நேரடியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறிகளைக் கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பார்த்திபன் கூறுகையில், “கடந்த காலங்களில் கஜா புயல் வந்தபோது இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அப்போது ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நிலையில் இந்த கொரோனா பாதிப்பு மேலும் அவர்களின் வாழ்க்கையை சிதைத்துள்ளது. அப்போது முடிந்தவரை உதவினேன். இப்போதும் உதவுகிறேன்.
இங்கே அடுப்பெரிக்கவே வழியில்லை, அவர்கள் எப்படி மாஸ்க் வாங்குவார்கள் என நினைத்து அவர்களின் பசியைப் போக்கவும், அவர்களின் சுகாதாரத்தை பாதுகாக்கவும் மாஸ்க், சானிடைஸர் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளேன். நான் வழங்கும் போது அவர்கள் முகத்தில் ஏற்பாடும் மகிழ்ச்சி என்னை உற்சாகப்படுத்துகிறது.
முதல் பகுதி முடிந்து இரண்டாம் பகுதியாக காய்கறிகளை இன்று வழங்கவுள்ளோம். யாரிடமும் இதற்காக நிதியை பெறவில்லை; என்னுடைய குடும்ப சேமிப்பு பணம் மூலமே இதனைச் செய்து வருகின்றேன். இந்த காரியங்களை பாராட்டு பெறுவதற்காக செய்யவில்லை, ஏழைகளின் சந்தோசம் நீடிக்கவே செய்கிறேன்” என தெரிவித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் துரை.சந்திரசேகரன் இந்த உதவி வழங்கலை தொடக்கி வைத்தார்.