எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செயல்படும் நோக்கில், கச்சா எண்ணெய் திட்டங்கள் பற்றி தி.மு.க மீது உள்நோக்கத்துடன் விமர்சிப்பதா என தினமணி நாளேட்டிற்கு டி.ஆர்.பாலு எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விளம்பர வருமானத்திற்காக எடப்ப்பாடி அரசுக்கு தினமணி நாளேடு பல்லக்குத் தூக்கட்டும்; அதற்காக தி.மு.க மீதும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்து காவிரிப் படுகையில் கச்சா எண்ணெய் திடங்களுக்கு தி.மு.க தான் காரணம் எனப் பழி போட்டு தலையங்கம் தீட்டுவதா என நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அ.தி.மு.க அரசின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு மாறான தகவலைச் சொல்வது புதிதல்ல, ஆனால், நடுநிலைக்கும், உண்மைக்கும், பத்திரிகை தர்மத்துக்கும் ஏ.என்.சிவராமன் காலத்தில் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த தினமணி இன்று எடப்பாடியின் ஊதுகுழலாக மாறியிருப்பதன் காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பியுள்ளார் டி.ஆர்.பாலு.
மேலும், தி.மு.க தலைவர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறியிருக்கும் தினமணி நாளேடு, மக்களுக்குப் பாதிப்பு தரும் எந்தத் திட்டத்தையும் தி.மு.க ஆட்சி செயல்படுத்தாது என்று கூறியதை ஏன் குறிப்பிடவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் டி.ஆர்.பாலு.