நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி உள்ளாட்சியில் வெற்றி வாகை சூடியது. தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
அதன்படி, பார்வதி எனும் பெண், ஊராட்சி வார்டு உறுப்பினராகப் பதவியேற்றபோது 'கலைஞர் அறிய' எனச் சொல்லிப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்வு தி.மு.கவினரை நெகிழ்ச்சிகொள்ளச் செய்துள்ளது.
உறுதிமொழி வாசகங்களை அதிகாரி சொல்லச் சொல்ல, வார்டு உறுப்பினரான பார்வதி சொல்கிறார். இறுதியாக, "கடவுள் அறிய உளமார உறுதி கூறுகிறேன்" என்று முடிக்க வேண்டிய இடத்தில், “கலைஞர் அறிய உளமார உறுதி கூறுகிறேன்” என்று உறுதியெடுத்துக் கொள்கிறார் அவர்.
இதுகுறித்த காணொளியை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “ஊராட்சி வார்டு உறுப்பினராக பதவியேற்ற சகோதரி பார்வதி, 'கலைஞர் அறிய' என்று சொல்லிப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட காட்சி தந்த பெருமிதத்தால், என் கண்கள் குளமாயின!
கலைஞரின் உழைப்புக்கு எத்தகைய உயிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதற்கு உதாரணம் இந்த சகோதரி! வாழ்த்துகள் பார்வதி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காலில் விழுந்து, மண்புழுவாக தரையில் ஊர்ந்து விசுவாசம் எனும் பெயரில் தலைவர்களை ஏமாற்றும் அடிமைகளுக்கு மத்தியில், கொள்கைத் தலைவனைக் கொண்டவர்கள், என்றென்றும் தங்கள் தலைவனை நெஞ்சில் வைத்து கொண்டாடுவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி என பலரும் இந்த காணொளியைப் பகிர்ந்து வருகின்றனர்.