அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்றவராய் திகழ்ந்து வரும் தி.மு.க தலைவர் குறித்துப் பேச ஊழலின் ஊற்றுக் கண்ணான வேலுமணிக்கு என்ன அருகதை இருக்கிறது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொள்ளைக் கும்பலின் தலைவராக உள்ளாட்சி அமைப்புகளில் கொள்ளையடித்து, மக்கள் வரிப்பணத்தை தனது சொந்த கஜானாவையும் - தனக்கு பதவி கொடுத்தவர்களின் கஜானாவையும் நிரப்பி வரும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி குறை கூறுவதற்கு அருகதையும் இல்லை; அடிப்படை தகுதியும் இல்லை.
கண்ட திசை எல்லாம் கும்பிடு போட்டு பதவி வாங்கி - மண்டியிட்டு மடிப்பிச்சை ஏந்தி - இப்போது அரசு பணம்தானே நம் இஷ்டத்திற்கு கொள்ளையடிப்போம் என்று உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்தையே குட்டிச்சுவராக்கி - ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை சாக்கடையில் மிதக்க விட்டுள்ள வேலுமணிக்கு எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து “சுட்டு விரலை” நீட்டக் கூட தகுதியில்லை.
“ஆயிரம், லட்சம், கோடியிலும்” உள்ள பல “ஜீரோக்களை” தினமும் உள்ளாட்சி துறையில் அடிக்கும் லஞ்சத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் வேலுமணி வாய் துடுக்காக - அடித்த கொள்ளைப் பணத்தில் அமர்ந்திருக்கும் ஆணவத்தில் எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து “ஜீரோ” என்று விமர்சிப்பது கேடுகெட்ட அரசியல்வாதி எல்லாம் அமைச்சர் பொறுப்பில் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
“உள்ளாட்சி நிர்வாகத்தில்” ஜீரோ, நேர்மையில் “ஜீரோ”, “வெளிப்படையான டெண்டரை விடுவதில்” ஜீரோ என்று பல ஜீரோக்களை வாங்கி, ஊழலிலும், பணம் சுருட்டுவதிலும் - “வேறு விவகாரங்களிலும்” ஹீரோவாக இருக்கும் வேலுமணிக்கு ஒரு நாகரீகமான அறிக்கையைக் கூட விடத் தெரியவில்லை என்பது தமிழக அமைச்சரவைக்கு வெட்கக் கேடு.
“அடிமையாக” இருந்து ஆட்சி செய்வது எளிது. “ஊழல் மட்டுமே” எங்கள் வேலை என்று ஆட்சி செய்வதும் எளிது. இப்படி கெஞ்சிக் கூத்தாடி, மாதம் ஒரு முறை டெல்லிக்குச் சென்று மத்திய மந்திரிகளிடம் காலில் விழுந்து - சாஷ்டாங்கமாக கும்பிட்டு “எங்களை காப்பாற்றுங்கள்” என்று அனைத்தையும் சரண்டர் செய்து விட்டு ஆட்சி செய்வது அதை விட எளிது - அப்படி தமிழக நலனுக்கும், தமிழக உரிமைகளுக்கும் கேவலமான ஒரு ஆட்சியை நடத்தி வரும் இந்த ஆட்சியைப் பார்த்து “அண்ணன் எடப்பாடியார் சிறப்பாக ஆட்சி செய்கிறார்” என்று அமைச்சர் வேலுமணி போவது - சனிப் பிணம் தனியாகப் போகாது என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. உள்ளாட்சி துறை அமைப்பில் நடைபெறும் வண்ணமிகு மெகா ஊழல்களில் எனக்கு மட்டும் பொறுப்பல்ல - “அண்ணன் எடப்பாடியாருக்கும்” பொறுப்பு என்று அமைச்சர் பகிரங்கமாகக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
தான் ஒரு சூரப்புலி போல் அறிக்கை விடுத்துள்ளார் எஸ்.பி.வேலுமணி. தி.மு.க. மற்றும் அறப்போர் இயக்கம் கொடுத்த புகார்களில் உள்ள 349 ஒப்பந்தங்கள் தொடர்பான இமாலய ஊழலை விசாரிக்க அனுமதி கொடுத்துள்ளது அ.தி.மு.க. அரசுதான். சென்னை மாநகராட்சியில் 76 கான்டிராக்ட், கோவை மாநகராட்சியில் 244 கான்டிராக்ட், திருப்பூர் மாநகராட்சியில் 4 கான்டிராக்ட், சேலம் மாநகராட்சியில் 2 கான்டிராக்ட், பொதுப்பணித் துறையில் 22 கான்டிராக்ட் ஆகியவற்றை விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியிருப்பது லஞ்சஊழல் தடுப்புத் துறைதான்.
ஒரே ஐ.பி. அட்ரஸில் இருந்து இந்த டெண்டர்களை எல்லாம் போட்டிருப்பது திரு எஸ்.பி.வேலுமணியின் பினாமி கம்பெனிகள்தான். புகார்களுக்கு பதில் சொல்லுங்கள் என்று அனுப்பப்பட்ட கோர்ட் நோட்டீஸை வாங்காமல் ஓடி ஒளிந்தது சாட்சாத் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். நோட்டீஸை வாங்கவில்லை என்றால் பத்திரிகையில்தான் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியவர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிதான். எட்டு மாதங்கள் நோட்டீஸுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி - திருவிழா கூட்டத்தில் தொலைந்து போனவர் போல் முச்சந்தியில் முழி பிதுங்கி நின்றது அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். “தயவுசெய்து பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துவிடாதீர்கள். அமைச்சரை பதில் சொல்லச் சொல்கிறேன்” என்று கூறும் அளவிற்கு உயர்நீதிமன்றத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியவர் வேலுமணிதான்.
குற்றச்சாட்டுகளுக்கு நவம்பர் 1ம் தேதிக்குள் பதில் கொடுங்கள் என்று உயர்நீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கைக்கு உள்ளானவரும் வேலுமணிதான். சூடு சொரணை தன்மானம் உள்ளவராக இருந்தால் வேலுமணி தன்மீது ஊழல் விசாரணைக்கு அ.தி.மு.க அரசு அனுமதி கொடுத்த அன்றே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். அப்படி ராஜினாமா செய்து விட்டால் ஊழல் வழக்கில் ஏதாவது ஒரு சிறையில் களி திண்ண வேண்டியதிருக்கும் என்று பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பவர் வேலுமணிதான். “பாதுகாப்பவர்களுக்கு கப்பம் கட்டி” பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ள வேலுமணியின் அறிக்கை சாத்தான் வேதம் ஓதுவது போலிருக்கிறது.
ஆற்றுமணலுக்குப் பதிலாக எம்.சாண்ட் ஊழலில் இருந்து அனைத்து மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெற்ற ஊழல்கள் மீது விசாரணை நடைபெற்றாலே அமைச்சர் வேலுமணி சிறைக்குச் செல்வது உறுதி. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அவருக்குத் தெரிகிறது. அதனால்தான் ஊரக ஊராட்சி தேர்தலை மட்டும் நடத்தி- மாநகராட்சி, நகராட்சி ஊழல்களை மறைக்கலாம் என்று சதி திட்டம் போட்டார்.
இந்த சதி திட்டத்திற்கும், அமைச்சருடன் ஊழல் செய்த அதிகாரிகளுக்கும் எங்கள் கழக தலைவர் எச்சரிக்கை விடுத்தவுடன் “எஞ்சியிருக்கின்ற நாட்களில் ஊழல் செய்ய முடியாதோ” என்ற பதட்டத்தில் இந்த அறிக்கை என்ற பெயரில் வரிக்கு வரி உளறிக் கொட்டியிருக்கிறார். ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முடியாதவர், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்த வக்கில்லாதவர், நேர்முகத் தேர்தல் மூலம் மக்களை சந்திக்க திராணி இல்லாதவர், தனி அதிகாரிகளை வைத்து 40 மாதங்களுக்கு மேல் கொள்ளையடித்து வருபவர்- ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதில் சொல்லட்டும். லஞ்சஊழல் தடுப்புத் துறை முன்பு ஆஜராகி விளக்கமளிக்கட்டும்.
தி.மு.க ஆட்சி காலங்களில் நடைபெற்ற பணிகளுகளுக்கான திட்ட மதிப்பீடுகளுக்கு கூடுதல் சதவீதம் வழங்கப்பட்டதாக பெரிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பணித்துறை வெளியிடும் விலைப் பட்டியலின்படியே திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகிறது என்பதை மாநகராட்சியில் உள்ள கடைநிலை ஊழியன்கூட நன்றாக அறிவானே, அது இந்த அமைச்சருக்கு தெரியாமல் போனது விந்தையே.
இவர் அமைச்சராக பொறுப்பேற்ற இவ்வளவு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற லட்சக்கணக்கான பணிகளில் ஒன்றிலாவது திட்ட மதிப்பீட்டை காட்டிலும் குறைந்த சதவீதத்தில் பணி நடைபெற்றுள்ளதா? எதையாவது ஒன்றை அடையாளங்காட்ட முடியுமா? ஆனால், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வணக்கத்திற்குரிய மேயராக பொறுப்பு வகித்த சமயத்தில்தான் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு ஓரளவுக்கான தீர்வாக இருந்து கொண்டிருக்கும் ஒன்பது மேம்பாலங்கள் கட்ட முடிவான திட்ட மதிப்பீடு 94.50 கோடி ரூபாய், ஆனால், அப்பாலங்கள் கட்ட ஆன செலவு 60.78 கோடி ரூபாய் மட்டுமே.இதனால் மாநகராட்சிக்கு மீதப்படுத்தப்பட்ட தொகை 33.72 கோடி ருபாய் என்பதை அதிகரிகளிடத்தில் தெரிந்துகொண்டு அறிக்கை விட்டால் நன்றாக இருக்கும்.
முதலமைச்சரையும், ஊழல் பணத்தையும் வைத்துக் கொண்டு போலீஸ் அதிகாரிகளை, மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டிக் கொண்டிருக்கும் எஸ்.பி.வேலுமணிதான் முதலில் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவராக, கழகத்தின் தலைவராக - பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தலைவராக சிங்கம் போல் பவனி வரும், எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்க துளிகூட அமைச்சருக்கு துப்பு இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
கையூட்டு கொடுத்து இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை - இனி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து உள்ளாட்சி தேர்தலில் பெற்று விடலாம் என்று அமைச்சர் கனவு காண வேண்டாம். மக்களை சந்திக்கும் திராணி இருந்தால் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டு சட்டமன்ற தேர்தல் களத்திற்கு வாருங்கள். அமைச்சர் வேலுமணியை மட்டுமல்ல; ஒட்டுமொத்த அமைச்சரவையையே ஓட ஓட விரட்டி அடிக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.