சென்னை ஐ.ஐ.டி-யில் கடந்த வாரம் ஐ.ஐ.டி.யில் முதுகலை படிப்பு பயின்று வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு முக்கிய காரணமாக மூன்று பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து மக்களவையில் பேசிய கனிமொழி, "சென்னை ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் 52 மாணவர்கள் 10 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு நிலவுவதாக 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உயர் கல்வி நிறுவனங்கள் பாரபட்சம் காட்டும் இடமாக இருக்க கூடாது
பாத்திமாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார். மேலும் ஃபாத்திமா தன் மரணத்திற்கு யார் காரணம் என்று தெளிவாக குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை அது தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
பாத்திமாவின் தந்தை பாத்திமா தங்கியிருந்த அறைக்கு சென்ற போது அந்த அறை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவர் தூக்குமாட்டிக்கொள்ள பயன்படுத்திய கயிறு கூட அங்கு இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயர் இதுவரை எஃப்.ஐ.ஆரில் பதிவாகவில்லை. யாரைக் காப்பாற்றப் முயற்சிக்கிறது இந்த அரசு'' என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், உயர்கல்வித்துறை செயலாளரை விசாரணைக்காக அனுப்பி உள்ளதாக கூறினார். மேலும், அவர்கள் தரும் அறிக்கைக்கு உட்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என தெரிவித்தார். எனினும், அமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.